வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேனி: அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், பெரியகுளத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் வீர மரணமடைந்தார். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் இன்று(மார்ச் 18) சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தின் திராங் பகுதியில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலம், வ.உ.சி., தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் ஒரே மகன் மேஜர் ஜெயந்த், 35 மற்றும் 'லெப்டினன்ட்' ரெட்டி ஆகியோர் வீர மரணமடைந்தனர். மேஜர் ஜெயந்த் உடல் தனி விமானத்தில் நேற்று நள்ளிரவு, 1:30 மணிக்கு மதுரை வந்தது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, அவரது உடல் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி கலெக்டர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மேஜர் ஜெயந்த்:
* ஜெயந்த், 1988 டிச., 13ல் பிறந்தார். தந்தை ஆறுமுகம் 'டிவி' மெக்கானிக். தாய் மல்லிகா. மதுரை செவன்த்டே பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார். மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் பி.எஸ்.சி., கணிதம் படித்தார்.
* கல்லுாரி என்.சி.சி.,யில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுடில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றார். ராணுவத்தில், 2010ல் சேர்ந்தார்.
* பின், 2011ல் காஷ்மீரில், 'லெப்டினன்ட்' பதவியிலும், 2014ல் குஜராத்தில் 'கேப்டன்' பதவியிலும் இருந்தார். 'பைலட்' பயிற்சியில் தேர்வு பெற்று, 2018ல் ஸ்ரீநகரில் பைலட்டாகவும், 2021ல் அசாமின், மிசோரி ராணுவ மையத்தில் மேஜராகவும் உயர்ந்தார்.
* கடந்த, 2018 அக்., 19ல் திண்டுக்கல்லைச் சேர்ந்த பி.டெக்., பட்டதாரி செல்லா சாரதா ஸ்ரீயுடன் திருமணம் நடந்தது. இவர், கணவருடன் மிசோரி ராணுவ குடியிருப்பில் வசிக்கிறார். சென்னையில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஆறுமுகம் வசிக்கிறார்.
மேஜர் ஜெயந்த் நாட்டிற்காக நிறைய சாதித்துள்ளார். அதனால் திருப்தியாக உள்ளது. மகன் ஜெயந்த் இறந்தது வருத்தமாக இருந்தாலும் நாட்டிற்காக அவன் சேவையாற்றியது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.