தமிழ் இலக்கண பாடத்தை நாம் பள்ளியில் படித்திருப்போம். ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம், உவமைத்தொகை, உம்மைத் தொகை, புணர்ச்சி விதிகள், மாத்திரை கணக்கு, விகுதி, வினைமுற்று என பல இலக்கண விதிகளை மனப்படம் செய்திருப்போம். கல்லூரி காலத்தில் தமிழ்ப்பாடம் இல்லாததால் இலக்கண விதிகளை சற்று மறந்திருப்போம் அல்லவா? அவற்றை அவ்வப்போது நினைவில் கொள்ளுவது தாய்மொழி தமிழ்மீதான நமது எழுத்து மற்றும் சொற்புலமையை அதிகரிக்க உதவும். தமிழ் இலக்கண விதிகளை வரும் நாட்களில் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்வோம். முதலாவதாக தெரிநிலை வினைமுற்று குறித்துப் பார்ப்போம்.
தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சம் பெயரெச்சமாகவோ, வினையெச்சமாகவோ இருக்கும். முற்று, எச்சம் எதுவாயினும் காலத்தை உணர்த்தும் சொற்கள் ஆகும். காலம் காட்டாத வினைப்பகுதியோடு இணைந்து நிற்கும் தொடரை வினைத்தொகை என்பர். தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று என வினைமுற்று நான்கு வகைப்படும்.
![]()
|
தெரிநிலை வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று என்பது செய்பவன் முதலா செய்பொருள் ஈறாக அமையும் ஆறையும் காட்டும் வினைமுற்று ஆகும்.
உதாரணம்: செல்வன் விளைவித்தான்
இதில் செல்வன் என்பது வினையைச் செய்யும் கர்த்தா என்னும் நபர்.
விளைவித்தான் என்பது கர்த்தாவின் செயலை உணர்த்தும் வினைமுற்று.
செய்பவன் - செல்வன்
கருவி - ஏர்
நிலம் - விவசாய நிலம்
செயல் - விவசாயம்
காலம் - இறந்த காலம்
செய்பொருள்- பயிர்
ஆகியவற்றை இந்த வாக்கியம் மூலம் அறியலாம்.
![]()
|
இவ்வாறு, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று. இவற்றுள் சில குறைந்து வரவும் வாய்ப்புள்ளது. ஆனால் வினைமுற்று காலத்தை தெளிவாகக் காட்டும்.