எவ்வளவு வயதானாலும் மேக்கப் இல்லாமல் வெளியே வர பலரும் தயங்குவர். முகத்தை கழுவிவிட்டு சாதாரணமாக ஒரு கிரீம், பவுடர், குங்குமத்துடன் கூந்தலை அழகாக வாரிவிட்டுதான் பிறர் முன்பு தோன்றுவர். இன்றைய இளசுகளோ வீட்டில் இருந்தால் கூட மாய்ஸ்சரைசர், சிம்பிள் பவுண்டேஷன், காஜல், லிப்ஸ்டிக் எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். வெளியே சென்றால் அவ்வளவுதான் மேக்கப் கிட்டையும் தூக்கிக் கொண்டே உலா வருவோரும் உள்ளனர். இப்படி... பார்த்து பார்த்து சருமப்பொலிவுக்கு கூடுதல் கவனம் செலுத்துவர். இருப்பினும், தங்களையும் அறியாமல் சருமப்பராமரிப்பில் செய்யக்கூடிய ஒரு சில தவறுகளைப் பார்க்கலாம்...
![]()
|
பலரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக முகத்தை அடிக்கடி கழுவுவர். ஆனால், ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கழுவினாலே போதுமானது. வெளியே எங்காவது சென்று வந்தால் தூசிகள் நீங்குவதற்காக வேண்டுமானால் கழுவலாம். குறிப்பாக மென்மையாக முகத்தை கழுவ வேண்டும். ஆனால் பலரும் பரபரவென்று தேய்ப்பது தவறானது. அதிகமாக முகத்தை கழுவும்போது, சருமத்திலுள்ள இயற்கையான எண்ணெய்கள் வெளியேறி, வறண்டு போகக்கூடும். அதேப்போல் ஈரமான சருமத்தை டவலில் பரபரவென துடைக்காமல், மிருதுவாக ஒற்றி எடுக்கவும்.
கண்களில் காஜல் அழுத்தமாக இருப்பதை நீக்க பலரும் ஒரு டவலை எடுத்து துடைக்க முயற்சிப்பர். இதற்கு பதிலாக சிறிய காட்டனை (பஞ்சு) எடுத்து சிறிது மேக்கப் ரிமூவருடன் சேர்த்து துடைத்தெடுக்கலாம்.
![]()
|
முகத்தை கழுவிய ஒரு சில நிமிடங்களிலேயே சருமத்தில் சிறிது ஈரப்பதம் இருக்கும்போதே, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். முகத்தில் ஆங்காங்கே சிறிய புள்ளிகளாக தடவி மிருதுவாக தேய்க்கவும். பரபரவென்று தேய்ப்பதை தவிர்க்கலாம்.
வெளியே சென்றால் தான் சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்த வேண்டும் எனப் பலரும் வீட்டிலிருக்கும் போது தவிர்க்கின்றனர். ஆனால், வீட்டிலிருக்கும் போது ஜன்னல்கள் வழியாக சூரியனின் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவக்கூடும். அப்போது சருமம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது.
வெளியே சென்று விட்டு இரவில் தூங்கும்போது எவ்வளவு சோர்வாக இருந்தாலும், மேக்கப்பை கலைத்துவிட்டு, நன்றாகக் கழுவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். அப்போதுதான் சருமத்துளைகளால் எளிதாக சுவாசிக்க முடியும்; சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும் போது கூடுதல் பொலிவு கிடைக்கக்கூடும்.