வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சுதந்திரத்திற்குப் பிறகு, சிறு தானிய விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தும் அரசாக பா.ஜ., ஆட்சி செயல்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

2023ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச சிறுதானிய மாநாட்டை இன்று (மார்ச் 18) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. பின்னர் அவர், சர்வதேச சிறுதானிய ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ நாணயத்தையும், தபால் தலையையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சிறுதானிய சந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும். சிறுதானிய விவசாயம் 2.5 கோடி விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். சிறுதானியம் உற்பத்தி இந்தியாவின் வளர்ச்சிக்கு துணைப் புரியும். இளைஞர்களின் பங்களிப்பு, சிறுதானிய துறையில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 75 லட்சம் விவசாயிகள் இந்த மாநாட்டில் நம்முடன் இணைந்து இருக்கின்றனர். சிறுதானிய விவசாயம் 12-13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இங்கு தற்போது சிறுதானிய உற்பத்தி அதிகரித்துள்ளது.சுதந்திரத்திற்குப் பிறகு, சிறு தானிய விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தும் அரசாக பா.ஜ., ஆட்சி செயல்படுகிறது. சிறுதானிய விவசாயம் கிராமப்புற பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.