சண்டிகர்: பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர். பதற்றத்தை தணிக்க அங்கு 24 மணிநேரத்திற்கு தொலைதொடர்பு சேவைகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபை பிரித்து தனிநாடாக அறிவிக்க, பல ஆண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டம் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு வெளிநாடுகளிலிருந்து செயல்பட்டு வருகிறது. பஞ்சாபில் கடந்த பிப்.,23ல் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்ததை கண்டித்து அந்த அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் தலைமையில் ஆயிரக்கணக்கானோர், கத்தி, வாளுடன் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை பஞ்சாப் போலீசார் இன்று (மார்ச் 18) கைது செய்தனர். இதனால் ஏற்படும் பதற்றத்தை போக்க, அங்கு போன் அழைப்பு, வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் சேவைகள் தவிர இணைய சேவை, எஸ்.எம்.எஸ் சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று மதியம் 12 மணி முதல் நாளை மதியம் 12 வரை முடக்கப்படுவதாக பஞ்சாபின் உள்துறை மற்றும் நீதித்துறை தெரிவித்துள்ளது.