புதுடில்லி:'புதுடில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை மிரட்டி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ., முயற்சிக்கிறது' என, ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. -
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., ராகவ் சதா, புதுடில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேர கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சேரவில்லை என்றால் சி.பி.ஐ-., மற்றும் அமலாக்கத்துறை வாயிலாக கடும் நடவடிக்கை எடுத்து சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் பா.ஜ., மிரட்டுகிறது.
டில்லி சட்டசபையில் இப்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
புதுடில்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62, பா.ஜ.,வுக்கு எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
ஆனால், மகாராஷ்டிராவைப் போல நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற போர்வையில் எம்.எல்.ஏ.,க்களை மிரட்டி விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ., சதி செய்து வருகிறது.
துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவையே உள்ளே தள்ளி விட்டோம். நீங்கள் சாதாரண எம்.எல்.ஏ., என மிரட்டினாலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வால் கவர்ந்திழுக்க முடியவில்லை. பா.ஜ., இதுபோன்ற முயற்சிகளை உடனே நிறுத்த வேண்டும்.
மணீஷ் சிசோடியா மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோடித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மற்ற எம்.எல்.ஏ.,க்களையும் மிரட்டுவதற்காக அவரை சிறையில் அடைத்து துன்புறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று முன் தினம் துவங்கியது.
அப்போது, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து, மூன்று எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் வெளியேற்றினார். மீதி ஐந்து பேர் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சட்டசபையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிரக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி கூறினார்.
கடந்த 2021ல் புதுடில்லி அரசு அறிமுகப்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, புதிய கொள்கையை கவர்னர் சக்சேனா ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் உள்ளார்.