சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அவர்கள் தியாகிகள் அல்ல; துரோகிகள்!

Added : மார் 18, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
அவர்கள் தியாகிகள் அல்ல; துரோகிகள்!எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு அரசியல் கட்சி சார்பில், அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், எந்த விதமான கொள்கையோ, கோட்பாடோ இன்றி, வேறொரு அரசியல் கட்சிக்கு தாவுவது அவ்வப்போது நடந்து வந்தது. இப்படிப்பட்ட நபர்களை ஒடுக்கவே, கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு

அவர்கள் தியாகிகள் அல்ல; துரோகிகள்!

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு அரசியல் கட்சி சார்பில், அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள், எந்த விதமான கொள்கையோ, கோட்பாடோ இன்றி, வேறொரு அரசியல் கட்சிக்கு தாவுவது அவ்வப்போது நடந்து வந்தது. இப்படிப்பட்ட
நபர்களை ஒடுக்கவே, கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டப்படி, ஒரு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், மூன்றில் ஒரு பங்கினர், அதாவது, ௩௩ சதவீதத்தினர் மாற்றுக் கட்சிக்கு தாவினால் மட்டுமே, அவர்களின் பதவி நீடிக்கும்; இல்லையெனில், பதவி பறிக்கப்படும். தற்போது, மூன்றில் ஒரு பங்கினர் கட்சி தாவினாலும், அவர்கள் அனைவரது பதவிகளும் மொத்தமாக பறிபோகும் வகையில்,சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அ.தி.மு.க.,வில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் சிலர், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும், முதல்வரை ஒருவர் பின் ஒருவராக, தொகுதி பணிகள் என்ற பெயரில் வரிசையாக சந்தித்து, கட்சி தாவ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் தொகுதிப்பணி என்று கூறுவது,என்ன பணி என்பதை, ஓட்டளித்த மக்கள்நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர்.கட்சி தாவ உத்தேசித்துள்ள, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்கள் சொந்தச்செல்வாக்கால் வெற்றி பெற்றவர்கள் அல்ல; கட்சி மற்றும் சின்னம் உதவியால் வெற்றி பெற்றவர்கள்.
சொந்தச் செல்வாக்கால் வென்றிருந்தாலும், சுயேட்சையாக நின்று வெற்றி வாகை சூடவில்லையே... கட்சி, 'லேபிளில்' தானே போட்டியிட்டு, வெற்றி பெற்றிருக்கின்றனர். இவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காக, சுய லாபத்திற்காக கட்சி தாவுவது, ஓட்டளித்த வாக்காளர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.எப்படி ஒன்று, இரண்டு என்று தாவிக் கொண்டிருந்தவர்களுக்கு, மூன்றில் ஒரு பங்கு என்று சொல்லி தடுப்பணை கட்டப்பட்டதோ, அதேபோல இனி, ஓட்டளித்த வாக்காளர்களின் மன விருப்பத்தை காலில் போட்டு மிதிக்கும், இந்த கட்சி தாவும் கலாசாரத்திற்கு, முழுமையாக முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது.
தேர்தல் ஆணையமோ, மத்திய அரசோ, உச்ச நீதிமன்றமோ, எந்த அமைப்பு, இந்த கட்சித் தாவலை தடை செய்ய வேண்டுமோ, அந்த அமைப்பு, ஒருவர், இருவர் அல்ல... ஒட்டு மொத்தமாக உள்ள அத்தனை உறுப்பினர்களும் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவினாலும், அன்றோடு அவர்களின் எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகள் காலாவதி
யாகும் என்று உத்தரவிட்டால் போதுமானது.இதன் வாயிலாக, கட்சித் தாவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, நம்பி ஓட்டளித்த வாக்காளர்களும் ஏமாற்றப் படுவது அறவே, அடியோடு தடுத்து நிறுத்தப்படும். கட்சி
தாவுவோர் தியாகிகள் அல்ல; துரோகிகள்!

ராகுலுக்கு எதிராக தீர்மானம்

நிறைவேற்றுங்க!வி.கோபாலன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: சுதந்திர போராட்ட காலத்தில், ஜவஹர்லால் நேரு பல ஆண்டுகள் சிறைவாசம்அனுபவித்தார். அப்படிப்பட்ட மாமனிதரின் குடும்ப வாரிசான ராகுல்,பிரிட்டன் மண்ணில், இந்தியா பற்றியும், மோடி தலைமையிலான மத்திய அரசு பற்றியும், தாறுமாறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் பேசியிருப்பது, இல்லை... இல்லை... உளறியிருப்பது, கோடிக்கணக்கான இந்தியர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
'பாரத ஒற்றுமை யாத்திரை' மேற்கொண்ட ராகுல், இனி பாரதமே தன் பாதத்திற்கு கீழ் தான் என்ற இறுமாப்பில் இருந்தார். அந்த எண்ணத்தில் இடி விழுந்தது போல, வடகிழக்கு மாநிலங்கள் மூன்றில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்து விட்டது. அதன் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ தான், பிரிட்டனில்உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி, நாட்டை கொச்சைப்படுத்தி விட்டார்.ஆனாலும், ராகுலின் பேச்சை பிரிட்டனில் யாரும் நம்ப மாட்டார்கள்.
அதேநேரத்தில், ராகுலின்பேச்சை, இந்திய மக்களும் ஏற்கவில்லை என்பதை, அவருக்கு உணர்த்தியாக வேண்டும். இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், அன்னிய மண்ணில் பேசிய ராகுலை கண்டித்து, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்மானம் குறித்து விவாதித்து, ஓட்டெடுப்பு நடத்தி, அதற்கு ஆதரவாக நிறைய எம்.பி.,க்கள் ஓட்டளிப்பதன் வாயிலாக, ராகுலுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
முடிந்தால், பா.ஜ., அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் சட்டசபைகளிலும், ராகுலுக்கு எதிராக கண்டனம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதன் வாயிலாக, மோடி ஆட்சியில் இந்தியாவின் பெருமை, எந்த அளவுக்கு உயர்ந்துள்ளதுஎன்பதை, உலகுக்கும், நாட்டு மக்களுக்கும் உணர்த்த வேண்டும். இது, காங்கிரஸ் கட்சி மீது, மக்கள் ஏற்கனவே கொண்டிருக்கும்வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்து, பா.ஜ.,விற்கான ஆதரவை பெருக வைக்கும். அந்த ஆதரவு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் ஓட்டு
களாகி, பா.ஜ.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றி பெறும்; மீண்டும் பிரதமராவார் மோடி. அத்துடன், எதிர்க்கட்சிகளின் கொட்டமும் அடங்கி விடும்.

'செட்' தகுதித் தேர்வு எப்போது?

முனைவர் த.சத்தியசீலன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: பல்கலை கழகங்கள்மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர்களாகபணியாற்ற, முதுநிலை பட்ட மேற்படிப்புடன், பிஹெச்.டி., ஆராய்ச்சி படிப்பு அல்லது, 'நெட்' என்ற, தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி அல்லது'செட்' என்ற மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.'நெட்' தேர்வானது, மத்திய அரசால், தேசிய தேர்வு முகமை வாயிலாகவும், 'செட்' தேர்வானது, தமிழக அரசின் உயர்கல்வித் துறையாலும் நடத்தப்படுகிறது.'செட்' தேர்வானது, கடைசியாக, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை கழகம் வாயிலாக, 2018 மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்டது.
அதன்பின், இந்தத் தேர்வு குறித்த எந்தவித அறிவிப்பும், இதுவரை வெளியாகவில்லை; அதாவது, ஐந்து ஆண்டுகளாக, 'செட்' தேர்வு நடத்தப்படவில்லை. கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு, 'செட்' அல்லது, 'நெட்' தகுதித்தேர்வுகள் அல்லது பிஹெச்.டி., கல்வித்தகுதி அவசியம். அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், இந்நெறிமுறைகளையே வேலைவாய்ப்பில் பின்பற்றி வருகின்றன.
எனவே, தேசிய தகுதித்தேர்வான, 'நெட்' போலவே, மாநில தகுதித் தேர்வான, 'செட்'டும் ஆண்டுதோறும்நடத்தப்பட வேண்டியது அவசியம். 'செட்' தகுதித்தேர்வு நடத்தினால் மட்டுமே, தமிழ்வழி கல்வியில் படித்தவர்களால் தேர்ச்சி பெற முடியும். இதைக் கருத்தில் கொண்டு இத்தேர்வு குறித்த அறிவிப்பை, தமிழக அரசின் உயர் கல்வித் துறை விரைவில் வெளியிட வேண்டும் என்பதே, முதுநிலை பட்டதாரிகளின் எதிர்பார்ப்பு.

'தமிழ் எங்கே' என தேடும் நிலை உருவாகும்!

பி.சுரேஷ், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் பிளஸ் ௨ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி நடந்து வருகிறது. இதில், முதல் தேர்வாக தமிழ் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வு எழுத, பள்ளிகளில் படித்த, 8.51 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக, 9,000 பேரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தனித் தேர்வர்கள், 1,000 பேர் உட்பட,50 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் உள்ளது.
ஆங்கில தேர்வு எழுத வராமல், 'ஆப்சென்ட்' ஆயினர் என்றாலோ, கணக்கு தேர்வுக்கு, 'டிமிக்கி' கொடுத்தாலோ அதில் அர்த்தம் உண்டு; ஆனால், நம் தாய்மொழியான தமிழ் மொழி
தேர்வையே எழுத மறுத்து, ஆப்சென்ட்டாகி இருக்கின்றனர் என்றால், அதை ஆட்சியாளர்கள், அத்தனை சுலபமாக கடந்து விடக்கூடாது. ஏனெனில், தமிழகத்தில் நடந்து வருவது, 'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்று மூச்சுக்கு மூச்சு முழங்கி வரும் கழகத்தினரின் ஆட்சி. அரசு கட்டடங்களின் உச்சியில், 'தமிழ் வாழ்க' என்று, 'நியான்' விளக்கில் ஒளிர வைத்திருப்பவர்களின் ஆட்சி.
அதேநேரத்தில், இப்படி தமிழ் வாழ்க என்று, கட்டடங்களின் உச்சியில், 'போர்டு' மாட்டி வைத்திருப்பவர்களில், ஒருவரின் பெயர் கூட தமிழில் கிடையாது; மேலும், அவர்களின் குடும்பத்தினர், வாரிசுகள் நடத்தும் வியாபார நிறுவனங்களின் பெயர்களும் தமிழில் இல்லை. இப்போது, 'லேட்டஸ்டாக' ஒரு அரசியல் தலைவர், தமிழகத்தில்
காணாமல் போயிருக்கும் தமிழைத் தேடி புறப்பட்டிருக்கிறார் என்பது வேறு விஷயம். கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில், ௪௭ ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்தாண்டு, பிளஸ் ௨ தமிழ்பாடத் தேர்வை, ௫௦ ஆயிரம் மாணவர்கள் எழுதாமல், ஆப்சென்ட்டாகி உள்ளனர்.
இதிலிருந்தே, பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்லி சொல்லியே, தமிழக மக்களை சிந்திக்கவே விடாமல் வைத்திருக்கும், தி.மு.க.,வினர் ஆட்சியில், தமிழ் மொழியின் நிலை, எந்த அளவுக்கு மோசமாகி வருகிறது என்பதை அறியலாம்.
'சொல்லவும் கூடுவதில்லை; -அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும்' என, தமிழ் மக்களை நோக்கி, தமிழ்த்தாய் வருந்துவது போல பாடினார், பாரதியார். சாகாவரம் பெற்ற இந்த வரிகள், தற்போது தமிழை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கும் கழகங்களுக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்தும்.
இனியாவது ஆட்சியாளர்கள் விழித்து, தமிழை வளர்க்க முற்படாவிட்டால், தமிழ் வளர்ச்சி என்பது தேய்பிறையாகவே போய் விடும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், தி.மு.க.,வினரின் புளுகையும், புளுகு மூட்டைகளையும் நம்பவும், மயங்கி கிடக்கவும், ஒரு கூட்டம் தமிழகத்தில் உள்ளது. அந்தக் கூட்டமும் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழ் எங்கே என்று தேடும் நிலை உருவாகி விடும்.

காமராஜரிடம் பாடம் படியுங்க மாணவர்களே!

அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அ.மல்லாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்களும், இரண்டு மாணவியரும் சேர்ந்து, சமீபத்தில் வகுப்பறையில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில்
பரவியது. இதையடுத்து, தவறு செய்த அந்த மாணவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இப்படிப்பட்ட மாணவர்கள் நேர்மையான முறையில், பொதுத்தேர்வுகளை எழுதுவரா என்பதும் சந்தேகமே. எனவே, தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், நம் படிக்காத மேதை காமராஜரிடம்
இருந்து பாடம் கற்க வேண்டும். காமராஜர் மூன்றாம் வகுப்பு படித்த போது, கணக்கு ஆசிரியர் தேர்வு வைத்தார். அப்போது ஆசிரியர், 'நான் வாய் கணக்கு ஒன்று சொல்வேன். சொல்லி முடித்தவுடன் ஒன்று, இரண்டு, மூன்று என்று கூறுவேன்; அதற்குள் எல்லா மாணவர்களும் விடையை எழுதி, சிலேட்டை தரையில் கவிழ்த்து விட வேண்டும்'
என்றார். அதன்படி ஆசிரியரும்கணக்கு போட்டார்.அதாவது, 'உன் அம்மா, கோழி முட்டை வாங்குவதற்காக கடைக்கு செல்கிறார். வீட்டில் உள்ள அப்பா, அம்மா, பாட்டி, தங்கை, அண்ணன் ஆகிய ஒவ்வொருவருக்கும், இரண்டு முட்டைகள் வீதம் கிடைக்க வேண்டும் என்றால், எத்தனை
முட்டைகளை வாங்கியிருப்பார்?' என்று கேட்டார். இந்தக் கேள்வியை கேட்ட ஆசிரியர், ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லி முடித்தார். பெரும்பாலான மாணவர்கள் சிலேட்டுகளில் விடையை எழுதி கவிழ்த்து விட்டனர்; காமராஜர் விடை எழுதாமல் இருந்தார். அருகில் இருந்த ராமையா என்ற மாணவர், காமராஜருக்கு தன் விடை ரியுமாறு சிலேட்டை காட்டினார். அந்த நேரம் பார்த்து, பள்ளியின் தலைமையாசிரியர் வகுப்பு அறைக்குள் நுழைந்தார். உடன் காமராஜரும், தன் விடையை எழுதி சிலேட்டை கவிழ்த்தார்.
காமராஜர் காப்பியடித்து விட்டார் என்று நினைத்த தலைமையாசிரியர், நேராக வந்து காமராஜரை அடித்து விட்டார். பிறகு, சிலேட்டை எடுத்து காட்டும்படி காமராஜரிடமும், ராமையாவிடமும் கூறினார். ராமையாவின்
சிலேட்டில் விடை, 10 என்று எழுதப்பட்டு இருந்தது; காமராஜர் தன் சிலேட்டில், எட்டு என்று எழுதியிருந்தார். ஆக, அவர் காப்பி அடிக்கவில்லை என்பதை உணர்ந்த தலைமையாசிரியர், தன் வருத்தத்தை தெரிவித்தார். 'விடை, 10 என்கிற போது, நீ மட்டும் ஏன் எட்டு என்று தவறாக எழுதினாய்?' என வகுப்பாசிரியர் கேட்ட போது, 'எங்கள் வீட்டில், அப்பா சமீபத்தில் இறந்து விட்டாரே... அப்படியானால், அம்மா நாலு பேருக்கு, எட்டு முட்டைகள் தானே வாங்குவார்' என்று,
அப்பாவியாக பதில் சொல்லியுள்ளார் காமராஜர். அன்று சிறுவனாக இருந்த காமராஜரிடம், விடை தவறாக இருந்தாலும், காப்பியடிக்காத நேர்மையும், ஒழுக்கமும் இருந்தது.
எனவே, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், காமராஜரிடம் இருந்து ஒழுக்கத்தையும், நேர்மையையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் இதைப் போதிக்க வேண்டும்.
அப்போது தான், நேர்மையான இளைய சமுதாயம் உருவாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

veeramani - karaikudi,இந்தியா
19-மார்-202311:00:04 IST Report Abuse
veeramani தாய் மொழியாம் தமிழ் .. தொன்மையான மொழி, தேன்மொழி என உலகத்தில் ஹீப்ரு ( யூதர்களின் மொழி. யேசுபெருமானும் , நபிகள் நாயகமும் பேசிய மொழி) மொழிக்கும் முந்தையது. தமிழை வளர்க்க முதலில் சில சட்டங்கள் அரசு கொன்னுருத்தல் வேண்டும் அலுவலகம்,வியாபார பெயர், வீடுகளின் பெயர்கள் முதலில் தமிழில் எழுதப்படவேண்டும். தமிழ் தொலைக்காட்சி சேநல்களில் முழுவதும் தமிழில்தான் பேசப்படவேண்டும். எப் எம் ரேடியோக்களில் தமிழ்தான் பேசுதல் வேண்டும். இதேபோல் தொகுப்பாளர்கள் செந்தமில்லில் தான் பேசவேண்டும். பிளஸ் டூ தேர்வில் தமிழில் எழுதினால்தான் மற்றய தேர்வுகளுக்கு அனுமதி.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-மார்-202304:21:25 IST Report Abuse
D.Ambujavalli எல்லா அரசியல்வாதிகளும் பேச்சளவில் காமராஜ் ஆட்சி என்னும் போது, பள்ளியின் தேர்ச்சி எண்ணிக்கை அதிகரிக்க வேண்டி ஆசிரியர்களே காப்பியடிக்க ஊக்கப் படுத்துவது தான் நடக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X