திருத்தணி:திருத்தணி வன சரகத்தில், 4,500 ஏக்கர் பரப்பில் காப்புக்காடுகள் உள்ளன. இங்கு மயில், மான், குரங்கு, காட்டுப்பன்றி, முயல் உட்பட பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், திருத்தணி அடுத்த, கன்னிகாபுரம் பகுதியில் வனப்பகுதி ஒட்டியுள்ள தனி நபருக்கு சொந்தமான வயல்வெளியில், மர்மமான முறையில் இறந்த ஐந்து பன்றிகளை மர்ம நபர்கள் போட்டு விட்டு சென்றுள்ளனர்.
அவ்வழியாக சென்றவர்கள் துர்நாற்றம் வீசியதையடுத்து காட்டுப்பன்றிகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருத்தணி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த போது, இறந்து கிடப்பது காட்டுப்பன்றிகள் இல்லை, சாதாரண பன்றிகள் என்றும், வீடுகளில் வளர்க்கும் பன்றிகள் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
இதை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத வயல்வெளியில் வீசிச் சென்றுள்ளனர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனப்பகுதியை ஒட்டி பன்றிகள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதால் காட்டு விலங்குகளுக்கும், அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே வனப்பகுதி அருகில் நோயினால் இறந்த பன்றிகளை வீசிச் சென்ற மர்ம நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.