சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க, தர்பூசணி, இளநீர், ஜூஸ், நுங்கு, குளிர்பானம் போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களைதான் விரும்பி சாப்பிட தோன்றுகிறது. ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்குதான் இவை எல்லாம்.
ஐந்தறிவு படைத்த பறவைகளுக்கோ தாகம் தணிக்க தேவைப்படுவது தண்ணீர் மட்டுமே.
ஒரு காலத்தில் நம்மை சுற்றி கூட்டம் கூட்டமாக வாழ்ந்த பறவைகள் இன்று பார்ப்பதே அரிதாகி விட்டன.
குறிப்பாக, நகர பகுதிகளில், காகம், மயில், புறா, மைனா, சிட்டுக்குருவி போன்ற ஏராளமான பறவைகள் எல்லாம் இன்று குறைந்தளவில் மட்டுமே இருக்கின்றன.
முன்பெல்லாம் அரிசி புடைப்பது, தானியங்களை வீட்டுக்கு வெளியிலும், மொட்டை மாடியிலும் காயவைப்பது போன்ற பழக்கங்கள் நடைமுறையில் இருந்ததால், எளிதில் பறவைகளுக்கு உணவு கிடைத்தது.
மரங்களில் உள்ள பூச்சி, புழுக்களை உணவாக்கி கொண்டு, அங்கேயே கூடு கட்டியும் வாழ்ந்து வந்தன. ஆனால் இன்றோ, மரங்களும் இல்லை, உணவும் கிடைப்பதில்லை. பதிலுக்கு, காய்ந்து போன சாலைகளும், கடினமான கான்கிரீட் வீடுகளும்தான் உள்ளன.
இதனால், பறவைகள் இனம் மெல்ல மெல்ல நகரங்களை விட்டு மறைந்து வருகின்றன.
வறட்சியாலும், கோடை வெப்பத்தில் தண்ணீர் இல்லாமல் பறவைகள் தவித்து நிற்கின்றன. வீட்டின் முன்பு அல்லது மொட்டை மாடிகளில், சிறு குவளையில் தண்ணீர் வைப்பதாலும், சுற்றிலும் தானியங்களை துாவுவதாலும், அவற்றின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
பறவைகள் நல ஆர்வலர்கள் கூறுகையில், 'பறவை இனம் குறைவதற்கு காரணம் அதன் வாழ்விடங்கள் மறுக்கப்படுவதுதான். வீட்டின் அருகில் பறவைகள் இருப்பது தெரிந்தால், அவற்றுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வைக்க, ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.
தொடர்ந்து இதை பழக்கப்படுத்தினால் தான் பறவைகள் தினமும் அங்கு வரும். அதேசமயம், பறவைகளுக்காக மட்டுமல்லாமல், மனிதர்களின் நலனுக்காகவும் வீட்டின் அருகில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்' என்றனர்.
முன்பெல்லாம் அரிசி புடைப்பது, தானியங்களை வீட்டுக்கு வெளியிலும், மொட்டை மாடியிலும் காயவைப்பது போன்ற பழக்கங்கள் நடைமுறையில் இருந்ததால், எளிதில் பறவைகளுக்கு உணவு கிடைத்தது.
மரங்களில் உள்ள பூச்சி, புழுக்களை உணவாக்கி கொண்டு, அங்கேயே கூடு கட்டியும் வாழ்ந்து வந்தன.