திருச்சியைச் சேர்ந்த, 'யு - டியூபர்' பரமேஸ்வரி: பிறவியிலேயே, 'தலசீமியா' நோயால் பாதிக்கப்பட்டேன். ரத்தத்தில் தேவையான அளவை விட குறைவாக, 'ஹீமோகுளோபின்' இருப்பது தான் தலசீமியா. சிவப்பணுக்கள் விரைவாக சிதைந்து போவதே இதற்கு காரணம்.
தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடுமையான ரத்தசோகை இருக்கும் என்பதால், தொடர்ந்து ரத்தம் செலுத்த வேண்டும்.
அடிக்கடி ரத்தம் ஏற்று வதால், உடம்பில் அதிகமாக இரும்புச் சத்து சேரும்; இதனால், வேறு சில பக்க விளைவுகளும் உண்டாகும். அதற்காக, சில மாத்திரைகள் எடுத்துக்கிறேன்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை, இதயம், கல்லீரல் என, எம்.ஆர்.ஐ., பரிசோதனை செய்ய வேண்டும். ஏதாவது புதுசு புதுசா, பிரச்னைகள் வந்துக்கிட்டே இருக்கும். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும்.
அடிக்கடி ரத்தம் ஏற்ற வேண்டும் என்பதால், ஸ்கூலுக்கு அதிகம், 'லீவ்' போட வேண்டியது நேரிட்டது. அதனால், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டேன்; பின், தொலைநிலைக் கல்வியில் பள்ளிப் படிப்பை முடித்து, தற்போது, பி.காம்., படித்து வருகிறேன்.
'பரமு தல்ஸ்' என்ற பெயரில், 'யு - டியூப்' சேனல் ஆரம்பித்து, என்னோட ஹெல்த் சம்பந்தமான, 'விளாக்' பண்ணுவோம் என, முடிவெடுத்தேன். சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாதிரியும் இருக்குமே என்பதால், இதைச் செய்ய தீர்மானித்தேன்.
ஒரு கட்டத்தில், மருத்துவமனைக்கு போகாத நாட்களில், நான் எப்படி சந்தோஷமாக இருக்கிறேன் என்ற, 'வீடியோ'வையும் போட ஆரம்பித்தேன். இப்போது, எனக்கு ஒரு லட்சம், 'சப்ஸ்கிரைபர்ஸ்' இருக்கின்றனர்.
என் உடல் நிலை காரணமாக, யாரையாவது சார்ந்து தான் இருக்க வேண்டும். 'யு - டியூப்' சேனல் துவங்கிய பின், பொருளாதார ரீதியாக நான் தற்சார்பு நிலையில் இருக்கிறேன் என்பது சந்தோஷமே!
'இன்னும் கொஞ்ச நாளில் இந்த, 'ட்ரீட்மென்ட்' வந்துரும், அந்த ட்ரீட்மென்ட் வந்துரும்; உனக்கு சீக்கிரம் சரியாகி விடும்' என்று, அப்பா ஆறுதல் சொல்லிக்கிட்டே இருப்பார். ஆனால், அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும்... என் நோய் பிரச்னை தீரப் போவதில்லை என்பது.
நான் வருத்தப்பட்டால், என் அம்மா ஹாஸ்பிட்டல்ல தீவிர நோயாளிகள் இருக்கும் வார்டுக்கு கூட்டிட்டுப் போய், 'உன்னை விட கஷ்டப்படுறவங்க எத்தனை பேரு இருக்காங்க. நீ எவ்வளவோ நல்லா இருக்கேன்னு நினைச்சுக்கோ...' என்று சொல்வாங்க.
இந்த, 'பாசிட்டிவிட்டி' தான், என் வாழ்க்கையை அழகாக்குகிறது. வாழப்போகும் கொஞ்ச காலத்தை சந்தோஷமாகவே கழிக்க விரும்புகிறேன்.
****************
தரமாக தருவால் மக்கள் மனதில் நிற்கிறோம்.
ஒய்.ஜி., பெருங்காயம் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நெல்லையப்பன்: எங்கள் நிறுவனம், 1932ல் நெல்லை மாவட்டத்தில், சிறிய அளவில் துவக்கப்பட்டது. 90 ஆண்டு கால வளர்ச்சியில், மூன்று தலைமுறையினரின் விடாமுயற்சிக்கு பின், இன்று மாதந்தோறும், 25 டன் பெருங்காயம் தயாரிக்கும் நிறுவனமாக மாறியுள்ளது.
அத்துடன், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு, பெருங்காயத்தை ஏற்றுமதி செய்து வருகிறோம். கட்டிப் பெருங்காயம், துாள் பெருங்காயம், குருணை ரக
பெருங்காயங்களை தயாரிக்கிறோம். உற்பத்தி செலவை குறைக்க, நாட்டிலேயே முதல் முறையாக பெருங்காயத்தை, பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய ஆரம்பித்தோம். அடுத்தபடியாக, 15 கிராம் அளவில், பெருங்காய பாக்கெட்டுகளை அறிமுகம் செய்தோம். வாடிக்கையாளர்களை தக்க வைக்க, தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகள், எங்களுக்கு மிகப் பெரிய வளர்ச்சியை தந்தன; இதனால், விற்பனையும் அதிகமானது.
நான் பிசினசுக்குள் வந்ததும், பெருங்காயம் தயாரிப்பை இயந்திரமயமாக்கினேன். அத்துடன், ஐ.எஸ்.ஓ., உட்பட, எங்கள் தயாரிப்புகளுக்கு தேவையான, அத்தனை
தரச் சான்றுகளையும் பெற்றேன்.
அதுமட்டுமின்றி, விளம்பரப் பேழைகளில், பெருங்காயத்தை பயன்படுத்துவதன் வாயிலாக, மக்களுக்கு கிடைக்கும் மருத்துவப் பலன்களை எழுதி,
விளம்பரம் செய்ய ஆரம்பித்தேன். அதனால், எங்கள் தயாரிப்பு மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து, அவர்கள் எங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக மாறினர்.பெருங்காயம் தயாரிப்பு தொழிலை பொறுத்தவரை, மூலப்பொருட்கள் கிடைப்பது தான், மிகப் பெரிய பிரச்னையே. இப்போது வரை ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து தான், மூலப்பொருட்களை இறக்குமதி செய்கிறோம்.
அந்த நாடுகளில், போர் நடக்கும் போதும், இயற்கை சீற்றங்கள் நிகழும் போதும், மூலப் பொருட்களின் விலை, நாம் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்து விடும்; அதற்காக நாங்கள், பெருங்காயத்தின் விலையை ஏற்ற முடியாது. இதுவே, இந்தத் தொழிலில் நாங்கள்
சந்திக்கும் சவால். இன்றைக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா உட்பட ஏழு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். உலகில் எங்கெல்லாம் தமிழ் மக்களும், தென்மாநில மக்களும் வசிக்கின்றனரோ, அங்கிருந்தெல்லாம் எங்களுக்கு,
'ஆர்டர்'கள் வருகின்றன. இப்போது, 'ஆன்லைன்' தளங்கள் வாயிலாக விற்பனை செய்யும் புதிய முயற்சி யிலும் இறங்கியுள்ளோம். பெருங்காயம் என்பது உணவில் ஒரு சிறு பகுதி; ஆனால், தவிர்க்க முடியாதது. அதை தரமாக தருவதால், மக்கள் மனதில் என்றும் நிலைத்து
நிற்கிறோம்.