கோடைகாலம் வந்தாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏன் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக காலம் கழிக்க திட்டமிடுவர்.
ஆண்டு இறுதி தேர்வு முடிந்தவுடன், ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகள் கோடை விடுமுறை அளிப்பர். வேலைக்கு செல்லும் பெற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று மகிழ்வர்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், திருவிழாக்களுக்கு செல்வர். கர்நாடகாவில் குளிர்ச்சி ஊட்டும் பிரதேசங்களுக்கு அதிக சுற்றுலா பயணியர் படையெடுப்பர். மலை, நீர்வீழ்ச்சி, வனப்பகுதி, கடற்கரை பிரதேசங்களில் காலம் கழிக்கவே பெரும்பாலானோர் விரும்புவர்.
இந்த வகையில், கர்நாடகாவின் சில சுற்றுலா தலங்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மலை பிரதேசமான குடகு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காவிரி ஆறு. அதன் பின், குளிர்ச்சியூட்டும் வானிலை, வனப்பகுதியில் சொகுசு விடுதியில் தங்குவது என பலவற்றை கண்டு ரசிக்கலாம்.
எப்போதும் வெகுவாக ஈர்க்க கூடிய அப்பி அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
காணும் இடம் எல்லாம் பச்சை பசேல் என்று வானுயர்ந்த மரங்கள், செடி, கொடிகள் காணப்படும். துபாரே யானைகள் முகாமுக்கு சென்றால் பிள்ளைகள் யானைகளை குளிப்பாட்ட வாய்ப்பு கிடைக்கும்.
வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக அமையும். இரவில் சுட சுட உணவு சாப்பிட்ட பின், கேம்ப் பையர் எனும் தீ மூட்டி குளிர் காய்தல் புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். நம்முடைய வசதிக்கு ஏற்றவாறு, ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகள், ஹோட்டல்கள் கிடைக்கின்றன.
காபி நகரம் சிக்கமகளூரு
காபி பிரியர்களுக்கு சிக்கமகளூரு என்றாலே அப்படி ஒரு சந்தோஷம் ஏற்பட்டு விடும். காபி எஸ்டேட்கள் பார்க்கும் போதே ஆங்காங்கே நின்று கொண்டு மொபைல் போன்களை கையில் எடுத்து, கிளிக் கிளிக் என்று படம் பிடிக்க ஆரம்பித்து விடுவர்.
முல்லையனகிரி, பாபா புடனகிரி மலைகள் பசுமை காட்சி, காண கிடைக்காத அரியது. இங்குள்ள மலை உச்சி ஹோட்டல்களில் தங்குவதற்காகவே குறிப்பிட்ட சிலர் ஆண்டுதோறும் வந்து விடுவர்.
இரண்டு, மூன்று நாட்கள் தங்கி நகர வாழ்க்கையின் நெருக்கடியை போக்கி மனதை புதுப்பித்து கொள்வர். நண்பர்கள், குடும்பத்தினருடன் சென்று மகிழ உகந்த இடம் என்றே சொல்லலாம்.
கடற்கரை நகரம் உடுப்பி
உடுப்பி சிறிய நகரமாக இருந்தால், சுற்றுலா தலங்களின் சொர்க்கம் ஆகும். அரபி கடலை ஒட்டி உள்ளதால் மீன் வியாபாரம் ஜோராக இருக்கும். உடுப்பி கிருஷ்ணர் கோவில் உலக பிரசித்தி பெற்றது.
மல்பே, மட்டு, குந்தாபுரா, காபு, கோடி, பித்ரோடி உடையவர், படுகெரே, படுபிதரி, ஹுடி, மரவந்தே, பெங்ரே, ப்ளூ வேல், நம்ம திராசி என பல கடற்கரைகள் உள்ளன.
கோடையில் எந்த கடற்கரைக்கு சென்றாலும் காணும் இடம் எல்லாம் சுற்றுலா பயணியர் குவிந்து இருப்பர். மல்பே கடற்கரையில் இருந்து, செயின்ட் மேரீஸ் தீவுக்கு படகில் அழைத்து செல்லப்படுவது புத்தம் புது அனுபவத்தை ஏற்படுத்தும்.
கடல் உணவு பிரியர்களுக்கு ருசியான உணவு கிடைக்கும்.
கடல் சார்ந்த நீர் விளையாட்டுகள், பாரா கிளைடிங், ஸ்கூபா டைவிங் என சாகசங்களிலும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு மகிழலாம். கடற்கரை ஒட்டியுள்ள சொகுசு விடுதியில் தங்கலாம்.
மன மகிழ செய்யும் ராம்நகர்
பெங்களூரு அருகில் உள்ளதால் காலையில் சென்று, இரவில் வீடு திரும்ப முடியும். சொந்த வாகனத்தில் செல்வது நல்லது.
பெங்களூரில் இருந்து, கனகபுரா சென்றால் மேகதாது, சங்கமம், முத்தத்தி, சுஞ்சி அருவி ஆகிய நான்கு சுற்றுலா தலங்களை அருகருகே கண்டு மகிழலாம்.
அருவி தவிர, மற்ற மூன்று இடங்களில் காவிரி ஆறின் குறுக்கே அமைந்துள்ளது. கோடையில் காவிரி ஆற்றில் குளிக்க உகந்த இடம் என்றே சொல்லலாம்.
உணவு நாம் கொண்டு செல்வது நல்லது. செலவும் குறைவு, நாள் முழுக்க குடும்பத்தினருடன் ஆற்றில் குளித்து மகிழலாம். கோடை வெயிலுக்கு இடையே ஆற்றில் குளியல் போடுவது புடிக்காத நபரே இருக்க முடியாது. அங்கேயே சமைத்த சாப்பிட வசதியும் உள்ளது.
- நமது நிருபர் -