புதுடில்லி:'செமிகண்டக்டர் சிப்'களை தயாரிக்கும் ஆலைகளை நிர்வகிக்க, தகுந்த திறமையானவர்கள் இந்தியாவில் இல்லை என்றும், வரும் 2027ம் ஆண்டிற்குள், சிப் தயாரிப்பு ஆலையை கையாளத் தெரிந்தவர்கள் 10 ஆயிரத்திலிருந்து, 13 ஆயிரம் பேர் வரை தேவைப்படுவர் என்றும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் துறையின் திறன் மேம்பாட்டுக் குழு நிறுவன நாள் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞானி பிரசாந்த் குமார் கூறியதாவது:
சிப் தயாரிப்பு தொழிற்சாலைகளை கையாளத் தகுதியான, திறமைவாய்ந்த பணியாளர்கள் நம்மிடம் இல்லை. இத்துறையில், வரும் 2027ம் ஆண்டிற்குள், 10-13 ஆயிரம் பணியாளர்களின் தேவை உள்ளது.
இந்தியாவில், 'செமிகண்டக்டர் டிசைனர்'கள் அதிகம் பேர் இருக்கின்றனர். ஆனால், செமிகண்டக்டர் ஆலையை நிர்வகிக்கக் கூடியவர்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட வேண்டிய நிலை தான் தற்போது உள்ளது.
அவ்வாறு அவர்கள் அழைத்து வரப்பட்ட பின், நம் நாட்டில் உள்ளோருக்கு படிப்படியாக பயிற்சி அளிக்கப்பட்டு, தொழிலை கற்றுத் தேர்ந்த திறமைசாலிகள் உருவாக்கப்படுவர்.
எதிர்காலத்தில் இத்துறையில் திறமையாளர்களை உருவாக்கும் பொருட்டு, கல்லுாரிகள் உட்பட 120 நிறுவனங்களுக்கு விலை உயர்ந்த அதிநவீன 'சிப் டிசைனிங் எலக்ட்ரானிக்ஸ் டிசைன் ஆட்டோமேஷன்' கருவிகளை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், மாணவர்களிடயே எலக்ட்ரானிக்ஸ் குறித்த போட்டிகளை நடத்தி, அவர்களது திறமைகளை வெளிக்கொணரவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில், 'செமிகண்டக்டர் டிசைனர்'கள் அதிகம் பேர் இருக்கின்றனர். ஆனால், செமிகண்டக்டர் ஆலையை நிர்வகிக்கக் கூடியவர்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட வேண்டிய நிலை தான் தற்போது உள்ளது.