மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டு உள்ளது என, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு 19 ஆயிரத்து 837 கோடி ரூபாய் சரிவைக் கண்டு, 46.48 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த இருப்பு, 12 ஆயிரத்து 118 கோடி ரூபாய் அதிகரித்து, 46.68 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில், அன்னிய செலாவணி இருப்பு, அதுவரை இல்லாத அளவுக்கு 52.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு, உலகளாவிய பாதிப்புகள் காரணமாக, ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டதால், ரிசர்வ் வங்கி அதிகளவில் அமெரிக்க டாலர் இருப்பை விற்று, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அன்னிய செலாவணி இருப்பு குறைந்தது.
அன்னிய பண மதிப்பு பெருமளவில் சரிவை கண்டதை அடுத்து இந்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அன்னிய பண மதிப்பு 3.81 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 913 கோடி ருபாய் குறைந்து, 3.48 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டு உள்ளது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.