கார் மீதான ஆசை ஒருவருக்கு சிறு வயதிலேயே ஏற்பட்டு விடும். வாழ்வில் முதல் சொந்த கார் என்பது இந்திய நடுத்தர மக்களுக்கு மட்டுமின்றி பெரும் பணக்காரர்களுக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவம் தான். அதனை என்றும் நினைவில் வைத்திருப்பர். தற்போது புதிய கார் வாங்குவது உங்கள் விருப்பப் பட்டியலில் உள்ளதா? நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியவைகள் இதோ...
கார் கடனுக்கான வட்டி நடப்பில் 8 சதவீதத்திலிருந்து 11 சதவீதம் வரை உள்ளது. கார் கடனுக்கான தவணைக் காலம் பொதுவாக 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை தருவார்கள். கடன் தொகையில் கால் சதவீதம் பிராசசிங் கட்டணமாக வசூலிக்கப்படும். காரின் எக்ஸ் ஷோரூம் விலையின் 100 சதவீதத்திற்கும் கடன் கிடைக்கும். இதர கட்டணங்களுக்கான தொகையை நீங்கள் டவுன் பேமென்ட் ஆக செலுத்த வேண்டியிருக்கும். காரையே அவர்கள் அடமானமாக எடுப்பதால், வேறு பிணையம் எதுவும் தேவைப்படாது.
கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்கவும். அதிக கிரெடிட் ஸ்கோர் குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடனைப் பெற உதவும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் அந்த அளவிற்கு இல்லை என்றால், உங்கள் ஸ்கோரை மேம்படுத்த நிலுவையில் உள்ள கடனை அடையுங்கள். அதன் பின்னர் ஸ்கோர் ஏறியதும் விண்ணப்பியுங்கள். அதுவரை டவுன்பேமென்ட் தொகையை அதிகரிக்க சேமியுங்கள்.
![]()
|
பார்ட் பேமன்ட் கட்டணம் குறித்து அறிந்துகொள்ளுங்கள். பல முன்னணி வங்கிகள் கார் கடனுக்கான பார்ட் பேமன்ட் தொகைக்கு கட்டணம் வசூலிக்கின்றன. முன் கூட்டியே அடைத்தாலும் கட்டணம் உண்டு. அது இல்லாத அல்லது குறைந்த பெனால்டி விதிக்கும் வங்கியாக தேடி தேர்வு செய்யுங்கள். போனஸ் போன்று மொத்தமாக பணம் கையில் புரளும் போது முன்னரே கடனை அடைக்கலாம். பொதுவாக ப்ரீபேமன்ட் தொகையில் 5% பெனால்டி. அதாவது நீங்கள் ரூ.1 லட்சம் பார்ட்பேமன்ட் செலுத்தினால் ரூ.5,000 கட்டணம். அவர்களுக்கு வட்டி வருவாய் இழப்பு ஏற்படுவதால் இதனை வசூலிப்பர்.