பணஜி:இந்தியாவில் 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களின் தோல்வி படிப்படியாக குறைந்து வருவதால், இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கான அரசின் திட்டங்கள் குறித்து, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, எஸ்.டி.பி.ஐ., எனும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அமைப்பின் இயக்குனர் ஜெனரல் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
தொழில்முனைவு பற்றிய பாடத்திட்டம், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தயாரிப்பு சுழற்சி குறித்து விளக்க வேண்டும். அவர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை தருபவர்களாக மாற்ற வேண்டும்.
எஸ்.டி.பி.ஐ.,யைச் சேர்ந்த இயக்குனர்கள் பல்வேறு கல்லுாரிகளுக்குச் சென்று, 'ஸ்டார்ட் அப்' குறித்தும், அதற்கான நிதி உதவிகள் குறித்தும் விளக்குகின்றனர்.
இதன் வாயிலாக அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால், இதை துரிதப்படுத்த வேண்டும்.
மேலும், நம் நாடு தற்போது தான் ஸ்டார்ட் அப் பயணத்தைத் துவக்கி உள்ளது. இந்த பயணத்தில் தோல்வி என்பது பத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் இருக்கத்தான் செய்யும்.
தொடக்க காலத்தில் ஏற்படும் தோல்விகள் காலப்போக்கில் படிப்படியாக குறையும். மேலும், தோல்வி விகிதங்களைக் குறைக்க, தொழில்முனைவோர் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் வழிகாட்டிகள் உள்ளனர். அவர்கள் தொழில்முனைவோர்களுக்கு தேவைப்படும் விஷயங்களில் வழிகாட்டி வருகின்றனர்.
இவ்வாறு அரவிந்த் குமார் கூறினார்.
தொழில்முனைவு பற்றிய பாடத்திட்டம் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.