உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டாரத்தில் ஆண்டுக்கு ஆண்டு நெல் சாகுபடி அதிகரித்து வரும் நிலையில் நடப்பாண்டில் கடந்த ஆண்டை காட்டிலும் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கூடுதலாக நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.
உத்திரமேரூர் வட்டார மொத்த நிலபரப்பில், 70 சதவீதம் விவசாய நிலங்களை உள்ளடங்கியதாக உள்ளது.
இங்குள்ள விவசாயிகள், ஏரிப்பாசனம், கிணற்றுப்பாசனம், ஆற்றுப் பாசனம் மூலம் நவரை, சம்பா, சொர்ணாவரி ஆகிய மூன்று பருவங்களிலும், பெரும்பாலும் நெல் பயிரிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
உத்திரமேரூர் வட்டாரத்தில் 2020- - 21ம் ஆண்டு சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவத்திற்கும் சேர்த்து, 19 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டது. 2021- - 22ம் ஆண்டில், மூன்று பருவத்திற்கும் 26 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
கடந்த ஆண்டில், உத்திரமேரூர் வட்டாரத்தில் நெல் சாகுபடியானது ஒரே ஆண்டில் 7 ஆயிரம் ஏக்கர் கூடுதலானது குறிப்பிடதக்கது.
இதனால், கடந்த ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே, உத்திரமேரூர் வட்டாரத்தில் தான் அதிகபட்சமாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த பருவ மழையை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் நவரை பட்ட நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாகினர்.
உத்திரமேரூர் வட்டாரத்தில், ஏரிகள் நிரம்பியதோடு, விவசாய கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, பாலாறு மற்றும் செய்யாற்றிலும் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தது.
இதனால், உத்திரமேரூர் வட்டார விவசாயிகள், 2022-- 23ம் ஆண்டுக்கு, இதுவரை 36 ஆயிரத்து 486 ஏக்கர் பரப்பிற்கு நெல் பயிரிட்டுள்ளனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகுந்தன் கூறியதாவது:
உத்திரமேரூர் வட்டார கிராமங்களில், 2021ம் ஆண்டை காட்டிலும், கடந்த ஆண்டு 7 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்தனர். கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டிற்கு 10 ஆயிரத்து 486 ஏக்கர் நிலப்பரப்பு கூடுதலாக நெல் பயிரிட்டுள்ளனர்.
நடப்பாண்டு நவரை பருவ நெல் சாகுபடிக்கு மட்டும் 23 ஆயிரத்து 320 ஏக்கர் நிலப் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இவ்வாறு ஆண்டுக்கு ஆண்டு உத்திரமேரூர் வட்டாரத்தில் நெல் சாகுபடி நிலப்பரப்பு அதிகரித்து வருகிறது.
நெல் சாகுபடி விவசாயிகளுக்கு, வேளாண்த் துறை மூலம் அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் மற்றும் நவீன சாகுபடி முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டங்களில் அவ்வப்போது எடுத்துரைத்து வருகிறோம்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் இப்பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தேவையான ஆலோசனைகள் பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.