காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட களக்காட்டூர் பகுதியில் இயங்கி வந்த துணை வேளாண்மை விரிவாக்க மையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காலுார், பெரியநத்தம், கீழ்பேரமநல்லுார், ஆற்பாக்கம், மாகரல், காவாந்தாண்டலம்.
வேடல், மேல்பேரமநல்லுார், வளத்தோட்டம், ஆசூர், அவளூர், இளையனார் வேலுார், சித்தாத்துார் போன்ற கிராம விவசாயிகள் அந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் மற்றும் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் போன்றவை வாங்கிச் செல்கின்றனர்.
துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் பழுதடைந்து இருப்பதால் மூடப்பட்டது. அந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டப்படும் என வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்னும் அதற்கான பணி துவங்கவில்லை. வேறு இடத்தில் விற்பனை மையம் துவங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
வேளாண்மை விரிவாக்க மையம் மூடப்பட்ட போது, இதே பகுதியில் வேறு இடத்தில் அலுவலகம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இந்த கிராமத்தில் அவர்கள் எதிர்பார்ப்பது போல் பெரிய கிடங்கு போன்ற கட்டடம் கிடைக்காது.
இருக்கும் கட்டடத்தில் வைத்து செயல்பட வேண்டும். வேளாண்மை விற்பனை மையம் இல்லாததால் விவசாயிகள் காஞ்சிபுரம் செல்ல வேண்டியிருக்கிறது.
விரைவில் இந்த பகுதியில் விற்பனை மையம் இயங்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.