வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொச்சி- ''நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செய்திகளுக்கு இடம் அளிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,'' என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்து உள்ளார்.
![]()
|
கேரள மாநிலம் கொச்சியில், பிரபல மலையாள நாளிதழான, 'மாத்ருபூமி'யின் நுாற்றாண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், பா.ஜ., வைச் சேர்ந்தவரும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அனுராக் தாக்குர் பேசியதாவது:
நாட்டின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் வகையிலான செய்திகளுக்கு ஊடகங்கள் இடம் அளிக்கக் கூடாது. இதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
புதுமை மற்றும் நவீனத்துவம் என்ற பெயரில் எதையும் ஏற்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செய்திகளின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதில் அச்சு ஊடகம், செய்தித்தாள்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
![]()
|
எவ்வளவு ஆதாரமற்ற மற்றும் நியாயமற்ற செய்திகள், உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளி நாட்டில் இருந்தோ வழங்கப்பட்டாலும், நம் தேசத்தின் ஜனநாயகத் தன்மை எப்போதும் உண்மையாகவே இருக்கும்.
மேற்கத்திய நாடுகளைப் போல், இந்தியாவில் செயற்கையாகப் பொருத்தப்பட்டதல்ல நம் ஜனநாயகம். இது, நம் நாகரிக வரலாற்றின் ஒருங்கிணைந்த மற்றும் அழிக்க முடியாத பகுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement