மத்திய அரசு, ஆண்டுதோறும் 'சங்கீத நாடக அகாடமி, உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்' விருதுகளை, இசை, நடனம், நாடக கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த, 2006 முதல், இந்த துறைகளில் உள்ள, 40 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த, 2019, 2020, 2021ம் ஆண்டுகளுக்கான விருதுகள், சமீபத்தில் டில்லியில் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை பெற்ற, தமிழக கலைஞர்களில் சிலரது விபரம்:
*பாலக்காடு ராம்பிரசாத்
கர்நாடக இசை வாய்ப்பாட்டுக்காக, பாலக்காடு ராம்பிரசாத்துக்கு, 2019ம் ஆண்டுக்கான 'யுவ புரஸ்கார்' விருது தரப்பட்டுள்ளது. மூத்த மிருதங்க கலைஞரான பாலக்காடு மணி அய்யரது பேரனான ராம்பிரசாத். பிறந்தது முதல் இசை கேட்டே வளர்ந்தவர். வயலின் வித்வானான தந்தை டி.ஆர்.ராஜாராம் இவரது முதல் குரு.
முதலில், ஏழரை வயதில் மேடையேறிய ராம்பிரசாத், இதுவரை ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளை நிகழ்ச்சி உள்ளார். பொருளாதாரத்தில் முனைவர், முதுமுனைவர் பட்டங்களை, அமெரிக்காவின் முன்னணி பல்கலைகளில் பெற்றுள்ளார்.
உலகின் மிக முக்கியமான பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவர். கர்நாடக இசையை தம் வாழ்க்கையாக கொள்ள வேண்டும் என்ற உந்துதலில், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேரப் பாடகர் ஆனவர். மிக இளம் வயதிலேயே, பல மூத்த பக்கவாத்தியக் கலைஞர்களோடு, இயல்பாக மேடையை அலங்கரித்தவர்.எல்.ராமகிருஷ்ணன்'வயலின் விற்பன்னர் கன்னியாகுமரி' என்றால், அறியாதார் யாருமில்லை. அவருடைய சீடர் தான், எல்.ராமகிருஷ்ணன். புகழ்பெற்ற இசைக் கலைஞரான ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் பாணியை பின்பற்றிய இசைக் குடும்பத்தில் இருந்து வந்த ராமகிருஷ்ணன், முதலில் குவைத் நாட்டில், அவரது தாயாரின் வழிகாட்டலில் ஹார்மோனியம் கற்றார்.
மும்பை வந்த பின், ஷண்முகானந்தா வித்யாலயாவில், முறையாக இசை பயிற்சி ஆரம்பமானது. ஏழு ஆண்டுகள் வயலின் பயிற்சி மேற்கொண்டார். அடுத்த கட்டம் தான், வயலின் வித்வான் கன்னியாகுமரியிடம் தீவிர பயிற்சி.பொறியியல் படிப்பு படித்த ராமகிருஷ்ணன், அமெரிக்கா சென்று, ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பின், மீண்டும் இந்தியா வந்து, தம் மனத்துக்குப் பிடித்த வயலின் இசையிலேயே தோயத் துவங்கினார்.முன்னணி பாடகர்களின் கற்பனைத் திறனுக்கு இணையாக, தன்னையும், தன் திறமையையும் மேடையில் வெளிப்படுத்தி வரும் ராமகிருஷ்ணனுக்கு, 2019ம் ஆண்டுக்கான கர்நாடக இசை வயலினுக்கான 'யுவ புரஸ்கார்' விருது வழங்கப்பட்டுள்ளது.
*கே.பரத்சுந்தர்
கடந்த 2020ம் ஆண்டுக்கான 'யுவ புரஸ்கார்' விருது பட்டியலில், கர்நாடக இசை வாய்ப்பாட்டுப் பிரிவில் விருது பெற்றவர் கே.பரத் சுந்தர். அபஸ்வரம் ராம்ஜியின் 'மழலை' குழுவில், மெல்லிசை பாடல்களைப் பாடியது முதல் துவங்குகிறது இவரது இசைப் பயணம்.
இவரது குடும்பம், இசைக் குடும்பம் அல்ல. பெற்றோருக்கு, இவரது குரல் வளம்மீது இருந்த நம்பிக்கையால், பல்வேறு பாடகர்களிடம் பயிற்சிக்கு அனுப்பினர். படிப்படியாக தம் பாடும் திறனை மேம்படுத்திக் கொண்டவரை, பாடகர் சவும்யா செம்மைப்படுத்தினார்.
இன்றைக்கு இளம் தலைமுறை கர்நாடக பாடகர்களில், இவர் தனித்துத் தெரிய பல காரணங்கள் உண்டு. முக்கியமாக கற்பனா ஸ்வரங்கள் பாடுவதில், இவருக்கு உள்ள ஈடுபாடு. அரூபமான இசையை கற்பனை செய்து, அதன் தொடர்ச்சியாக வளர்த்தெடுத்துச் செல்வது.
அந்த வகையில், இவரது மேடைக் கச்சேரிகள் தேர்ந்த இசை ரசிகர்களின் காதுகளை நிறைத்துக் கொண்டிருக்கின்றன.
*கே.எஸ்.விஷ்ணுதேவ்
நல்ல சம்பளம் தரும் ஐ.டி., துறையை விட்டுவிட்டு, முழுநேர கர்நாடக இசைப் பாடகர் ஆனவர், கே.எஸ்.விஷ்ணுதேவ். இசை உலகில், இவரை விஷ்ணுதேவ் நம்பூதிரி என்றால் தான் நன்கு தெரிகிறது. தன் அத்தையிடம் இருந்து, 9 வயதில் கர்நாடக இசையைக் கற்கத் துவங்கினார்.தான் பிறந்த கேராவில், 22 வயது வரை பல்வேறு குருக்களிடம் இசை பயின்றவர். தமிழக மற்றும் கேரள பாணிகளை ஒருங்கிணைத்தவர். அதன்பின் சென்னை வந்து, புகழ்பெற்ற பாடகர்களான நெய்வேலி சந்தானகோபாலன், பி.எஸ்.நாராயணசுவாமியிடன் பாடம் கேட்டவர். நல்ல குரல் வளம் மிக்க விஷ்ணுதேவ் நம்பூதிரிக்கு, 2021ம் ஆண்டுக்கான 'யுவ புரஸ்கார்' விருது கொடுக்கப்பட்டுள்ளது.
கடம் சந்துரு
'கடம் சந்துரு' என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஜி.சந்திரசேகர சர்மா. கர்நாடக கச்சேரிகளில் பக்கவாத்திய கருவியான கடத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதில், தாம் மட்டும் தனித்துத் தெரிய வேண்டும் என்று நினைக்காதவர் சந்துரு. மொத்த கச்சேரியும் களை கட்ட வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுபவர்.இசைக் குடும்ப பின்னணியில் வந்தவர் சந்துரு. மிருதங்கம் மற்றும் 'மோர்சிங்' கலைஞரான டி.ஆர்.ஹரி ஹர சர்மா, இவரது தாத்தா. அப்பாவோ, அண்ணாமலை பல்கலை வயலின் ஆசிரியர் டி.எச்.குருமூர்த்தி. இவர் புகழ்பெற்ற கடம் கலைஞர்களான
விக்கு விநாயக்ராம், சுபாஷ் சந்திரனின் சகோதரர் டி.என்.கிருஷ்ணனின் மாணவர். சிறு வயது முதலே, விக்கு விநாயக்ராம் மற்றும் சுபாஷ் சந்திரனின் கச்சேரிகளைக் கேட்டு வளர்ந்தவர் சந்துரு. சுபாஷ் சந்திரனிடமே பயிற்சியும் பெற்றவர்.
பல மூத்த கலைஞர்கள், தம் கச்சேரிகளுக்கு கடம் சந்துருவையே அழைக்க, அவரது இசை ஞானம்தான் காரணம். சந்துருவுக்கு முறையான வாய்ப்பாட்டு பயிற்சியும் உண்டு. இவருக்கு, 2021க்கான 'யுவ புரஸ்கார்' விருது வழங்கப் பட்டு உள்ளது.
நாகமணி
'முதல் பெண் மாண்டலின் இசைக் கலைஞர்' என்ற புகழ் பெற்றவர் யு.பி.நாகமணி. இவர், 7 வயது முதலே மாண்டலின் கருவியில், கர்நாடக இசைக் கோவைகளை வாசிக்கக் கற்றவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகமணி, தம் கணவர் யு.பி.ராஜுவோடு இணைந்து, பல அற்புதமான கச்சேரிகளை வழங்கியவர்.
'யார் வேண்டுமானாலும், இந்தக் கருவியை வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம்' என்று தெரிவிக்கும் நாகமணி, 5 வயது முதல், 45 வயது வரையுள்ள பலருக்கும் வகுப்புகள் எடுத்து வருகிறார். இவருடைய இசைப் பயணத்தையும், முயற்சியையும் மெச்சும் விதமாக, 2021ம் ஆண்டுக்கான 'யுவ புரஸ்கார்' விருது வழங்கப்பட்டு உள்ளது.
ஆர்.கிருஷ்ணன்
தற்கால இசை என்ற பிரிவில், 2021ம் ஆண்டுக்கான 'யுவ புரஸ்கார்' விருது பெற்றுள்ள அனந்தா ஆர்.கிருஷ்ணன், மிருதங்கத்தை வாசிப்பதில் விற்பன்னர். குடும்பத்திலேயே இசை ஓடுகிறது. இவரது தாத்தா தான் புகழ்பெற்ற மிருதங்க வித்வான், பாலக்காடு ஆர்.ரகு.
சிறு வயதிலேயே அமெரிக்கா சென்றுவிட்டவரை, தாத்தாவின் மிருதங்கம் தான் மீண்டும் இந்தியா இழுத்து வந்தது. மேடையில், 7 வயதில் அறிமுகமான ஆனந்தா, 20 வயதுக்குள் பிரபல கலைஞர்களான பாலமுரளி கிருஷ்ணா, ஹரிபிரசாத் சவுராசியா, டி.என். கிருஷ்ணன், யேசுதாஸ், மாண்டலின் ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக இருந்து,
தம் திறனை நிரூபித்துள்ளார்.மிருதங்க இசையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வரும் ஆனந்தா, தபேலா மேதையான உஸ்தா ஜாகீர் உசேனோடு இணைந்து, பல நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளார். தற்போது, ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில்
மிருதங்கம் சொல்லித் தருகிறார். - நமது நிருபர் -