சென்னை:'தமிழக எத்தனால் கொள்கை, நகர எரிவாயு வினியோக கொள்கை, சரக்கு போக்குவரத்து, ஜவுளி தொழில்நுட்ப கொள்கை' ஆகியவற்றை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
எத்தனால் கொள்கை
தமிழகத்தை, மாற்று பசுமை எரி பொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்துவது, இக்கொள்கையின் நோக்கம்
எத்தனால் கலந்த பெட்ரோலால், வாகனங்கள் வெளியேற்றும் புகை அளவு வெகுவாக குறையும். சுற்றுப்புற மாசுபாட்டின் நிலை குறைந்து, மக்கள் சுகாதாரம், வாழ்க்கை நிலை மேம்படும்
உபரி பருவத்தில், சர்க்கரை ஆலைகளின் செயல் திறனில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, பணப்புழக்கம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு தர வேண்டிய, விளைபொருள் கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை, தாமதமின்றி வழங்க இயலும்
கரும்பு, மக்காச்சோளம் போன்ற மூலப்பொருட்களை பயிரிடும் விவசா யிகளின் வருமானம் பெருமளவு அதிகரிக்கும். எரிபொருள் இறக்குமதியில், வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பது குறையும்
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு, இது பெரிதும் உதவும். இக்கொள்கை, ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
நகர எரிவாயு வினியோகம்
சுற்றுச்சூழலுக்கு உகந்த, பசுமையான எரி பொருளான, இயற்கை எரிவாயு உபயோகத்தை ஊக்கப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பை, தமிழகத்தில் விரைவாக அமைக்க, தேவையான விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவது, இக்கொள்கையின் நோக்கம்
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், வாகன பயன்பாட்டுக்கும், 2.30 கோடி வீடுகளுக்கும், குழாய் வழியே இயற்கை எரிவாயு வழங்க, இக்கொள்கை வழிவகை செய்கிறது. இதன் வழியே, 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, எட்டு ஆண்டு களில் ஈர்க்கப்படும்.
சரக்கு போக்குவரத்து
மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன், இக்கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது
ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் வலுவான போக்குவரத்து உட்கட்டமைப்பை உருவாக்குதல்; குறைந்த செலவில், உயர்ந்த தரத்திலான சேவைகள் கிடைக்கும் நிலையை ஊக்குவித்தல்
ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கும் அமைப்பை உருவாக்குதல்; சரக்கு போக்குவரத்து துறையில், திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவை, இக்கொள்கையின் முக்கிய கருப்பொருட்கள்
இக்கொள்கையின் வழியே சரக்கு போக்குவரத்துத் துறைக்கு, தொழில் அந்தஸ்து வழங்குதல். புதிய தொழில்நுட்ப உத்திகளை செயல்படுத்துதல்; திறன் மேம்படுத்துதல்; நிலைப்பு தன்மையை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கப்படும்
'சரக்கு போக்குவரத்து செயல் திட்டம்' வழியே மூன்று பெருவழித் தடங்களில் மட்டுமே, 50 செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இதனால், அடுத்த, 10 ஆண்டுகளில், 63 ஆயிரம் கோடி அளவுக்கு செயல் திட்டங்களும், 1.6 லட்சம் பேருக்கு, வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்
ஜவுளி தொழில்நுட்பம்
தமிழ்நாடு ஜவுளி தொழில்நுட்பம், மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து செயற்கை இழை நுால், செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்பு திட்டம்:
இச்சிறப்பு திட்டமானது, பெண்களுக்கு அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் வழங்குதல்; பெரிய திட்டங்களுக்கு சற்றே குறைவாக உள்ள முதலீடுகளுக்கும், அதிக அளவிலான ஊக்கத் தொகை வழங்குதல்; ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்து, இத்துறையை பயன்படுத்துதல்
மாநிலம் முழுதும், முக்கியமாக தொழில் ரீதியாக வகை செய்யப்பட்டுள்ள, 'பி, சி' மாவட்டங்களில், சமச்சீரான தொழில் மேம்பாடு ஆகியவை குறித்து, இக்கொள்கை விளக்குகிறது.
கொள்கை வெளியீடு நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.