புதுச்சேரி: பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டியிடம், ரூ. 4 கோடி மதிப்பிலான பணம், நகை, சொத்துக்களை ஏமாற்றியவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, சித்தன்குடி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி, 75; பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரது கணவர் தர்மலிங்கம் பிரான்சில் டாக்டராக பணிபுரிந்து கடந்த 2013ம் ஆண்டு இறந்தார். இவர்களின் 4 மகன்களில் இருவர் வெளிநாட்டிலும், இருவர் சித்தன்குடியிலும் வசிக்கின்றனர்.
அய்யங்குட்டிப்பாளையத்தை சேர்ந்த ஜெயராமன்,33; கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆதிலட்சுமியின் வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவர், ஆதிலட்சுமி மற்றும் அவரது கணவர் தர்மலிங்கம் பெயரில் இருந்த சித்தன்குடி வீட்டை, ஆதிலட்சுமியின் பெயருக்கு மாற்றுவதாக கூறி, மோசடி செய்து, கடந்த 2018ம் ஆண்டு, சத்தியராஜ் என்பவருக்கு ரூ.44 லட்சத்திற்கு விற்றுள்ளார்.
இந்த பணம் ஆதிலட்சுமியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த பணத்தை, ஆதிலட்சுமியிடம் இரு காசோலைகளில் கையெழுத்து வாங்கி, தனது நண்பர் நாகராஜ் பெயருக்கு மாற்றி உள்ளார்.
அதேபோல் மரக்காணம் செட்டிக்குப்பத்தில் ஒரு ஏக்கர் நிலத்துடன் கூடிய வீட்டை, லட்சுமி நாராயணன் என்பவர் பெயருக்கு மாற்றியுள்ளார். ஆதிலட்சுமி வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்., கார்டு மற்றும் காசோலை மூலம் ரூ. 79 லட்சம் பணத்தை ஜெயராமன் எடுத்துள்ளார். இது தவிர ஆதிலட்சுமியின் கார், பாஸ்போர்ட், சொத்து பத்திரங்கள், 15 சவரன் நகையை ஜெயராமன் திருடிச் சென்றுள்ளார்.
இது குறித்து ஆதிலட்சுமி, பிரெஞ்சு துாதரகத்தில் புகார் அளித்தார். துாதரகத்தின் பரிந்துரையின் பேரில், ஆதிலட்சுமியிடம் ரூ. 4 கோடி மதிப்பிலான பணம், நகை, சொத்துக்களை ஏமாற்றிய ஜெயராமன், அவரது கூட்டாளிகளான வானுாரை சேர்ந்த சத்தியராஜ், கோட்டக்குப்பம் தமிழ் அழகன், நாகராஜ், பாக்கம் லட்சுமி நாராயணன் ஆகிய 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. , இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில் முத்திரைப்பாளையத்தில் பதுங்கி இருந்த ஜெயராமனை நேற்று கைது செய்து, கார், ஸ்கூட்டர், 5 சவரன் நகை மற்றும் சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்தனர். ஜெயராமனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது மாமல்லபுரத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நாகராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
Advertisement