திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு பருவநிலை மாற்றத்தின் பாதிப்பை சீர்செய்யும் சிறுதானிய உற்பத்தி குறித்த தேசிய கருத்தரங்கில், நீண்ட ஆயுளை சிறுதானியங்கள் தருகின்றன என தெரிவிக்கப்பட்டது.
கல்லுாரி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப துறை, இந்திய சிறுதானிய ஆராயச்சி நிறுவனம், ஸ்டார்ட் அப்- தமிழ்நாடு சார்பில் நடந்த இக்கருத்தரங்கிற்கு முதல்வர் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார்.
திருப்பரங்குன்றம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராமதிலகம் சிறுதானிய கண்காட்சியை திறந்துவைத்தார். கல்லுாரி உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பாரதி வரவேற்றார்.
பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை என துறைத் தலைவர் கோபி மணிவண்ணன் பேசினார். பருவநிலை மாற்றத்தால் உணவு தானிய உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பை சரிசெய்திட சிறுதானிய உற்பத்தி எதிர்காலத்தில் பயன்படும் என விஞ்ஞானி இளங்கோ தெரிவித்தார்.
சிறுதானியங்களில் புரதம், கால்சியம், இரும்பு சத்து, நார்சத்து அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் நீண்ட ஆயுளை நமக்கு கொடுக்கிறது என அன்னை தெரசா மகளிர் பல்கலை பேராசிரியர் கீதாஞ்சலி பேசினார். ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மதுரை பிரிவு ராஜேந்திரன், புதியவகை தொழில் வாய்ப்புகள், வேளாண் தொழில் மேம்பாட்டு யுக்திகள் குறித்து விளக்கினார். பேராசிரியர் நாகதீபா நன்றி கூறினார்.