காரைக்குடி, : காரைக்குடியில் இருந்து காரில் நம்பர் பிளேட்டை மாற்றி ரூ.2.01 கோடி, ஒரு கிலோ நகையை கொள்ளையடித்து சென்றாலும், காரில் இருந்த விநாயகர் படமே குற்றவாளிகளை சிக்க வைத்துவிட்டது என போலீசார் தெரிவித்தனர்.
காரைக்குடி முத்துப்பட்டிணம் நகை ஏஜன்ட் ரவிச்சந்திரனை 43, மார்ச் 12 காலை 5:15 மணிக்கு ஆம்னி பஸ்சில் ரூ.2.01 கோடி, ஒரு கிலோ நகையுடன் வந்தவரை காரில் கடத்தி, 7 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
காரைக்குடி உதவி எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில் 6 தனிப்படை குழு விசாரித்தனர். காரைக்குடியில் இருந்து சென்னை வரை உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை சேகரித்து, விசாரித்ததில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க காரில் ஒட்டியிருந்த விநாயகர் படம் போலீசுக்கு பெரிதும் உதவியுள்ளது.
அந்த வகையில் காரைக்குடியில் காரில் நகை ஏஜன்டை கடத்தியபோது இருந்த வண்டி நம்பரை திருமயம் அருகே அவரை இறக்கிவிட்ட பின், நம்பர் பிளேட்டை மாற்றியுள்ளனர். ஆனால், அந்த காரில் இருந்த விநாயகர் படத்தை கவனிக்காமல் சென்றுள்ளனர். அந்த படமே குற்றவாளிகள் சிக்க காரணமாக அமைந்துவிட்டன.
இக்கொள்ளையில் ஈடுபட்ட சென்னை அமைந்தகரை ஊர்க்காவல் படை ஏரியா காமாண்டர் நாகேந்திரன் 57, சிந்தாதிரிபேட்டை சதீஷ் 36, சாமுவேல் 36, கார் டிரைவர் பால்ராஜ் 55, பெருமாள் 51, வாலாஜா பேட்டை விஜயகுமார் 52 ஆகிய 6 பேர்களை கைது செய்து, நேற்று காலை காரைக்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து கொள்ளை போனது ரூ.2.01 கோடி, ஒரு கிலோ தங்கம் மட்டுமே.
ஆனால் போலீசார் இவர்களிடம் ஏற்கனவே கொள்ளை செய்த நகை, வெள்ளி பொருட்களுடன் சேர்த்து ரூ.2.01 கோடி, 1.437 கிலோ தங்கம், 1.9 கிலோ வெள்ளி பொருட்கள், காருடன் பறிமுதல் செய்தனர்.