ஆர்.எஸ்.மங்கலம், : சுட்டெரிக்கும் வெயிலால் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதியான தேவிபட்டினம், கோப்பேரி மடம், திருப்பாலைக்குடி, சம்பை, சித்தார்கோட்டை, நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
கடல் நீர் அல்லது அப்பகுதியில் உள்ள அதிக உப்புத் தன்மை வாய்ந்த நிலத்தடி நீரை உப்பளங்களில் தேக்கி உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு உணவு பொருட்களின் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு தோல் பதனிடுதல், கருவாடு உலர்த்துதல் உள்ளிட்ட தேவைகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கு அதிகம் செல்கிறது.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் உப்பு உற்பத்திக்கு ஏற்றதாக சீதோஷ்ண நிலை தற்போது அமைந்துள்ளது. இதனால், பாத்திகளில் தேக்கப்படும் தண்ணீர் மூன்று நாட்களில் உப்பு படிவமாக மாறி விடுகிறது.
இதனால், தற்போது வாரத்திற்கு இருமுறை உப்பு உற்பத்தி செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளதாக, உப்பள தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.