நத்தம், : ''பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டுவது தான் தி.மு.க., ஸ்டைல்,'' என, - பா.ஜ., சிறுபான்மை தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் பேசினார்.
நத்தம் காந்திஜி கலையரங்கில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த காலங்களில் முதல்வர் ஸ்டாலின் வட மாநில தொழிலாளர்களை பற்றி வன்மமாக பேசி உள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது அண்ணாமலை ஆதாரத்துடன் வீடியோவில் சொல்லும் போது போலீசாரை வைத்து பொய் விழக்கு போடுவதுதான் தி.மு.க.,வின் செயல்முறையாக உள்ளது.உதயநிதி ஸ்டாலின் 'இந்தி தெரியாது போடா 'என டீ சர்ட் போட்டு கொண்டு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இப்போது எதிர்வினையாக பேசி வருகிறார். அவரது கூட்டணி கட்சியில் இருப்பவர்களை வைத்து வட மாநில தொழிலாளர்களை இழிவுப்படுத்தி பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏழை மக்களை மிரட்டி அதை அரசியல் செய்கிறது தி.மு.க., .பாரதிய ஜனதா பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை .பாரதம் என்பது அனைவருக்கும் பொதுவானது,என்றார்
மாவட்ட செயலாளர் சொக்கர் தலைமை வகித்தார்.நத்தம் தெற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். ஒன்றிய தலைவர்கள் செல்லத்துரை, மணிகண்டன், முத்துவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தனபால் பேசினார். துணைத்தலைவர் லெட்சுமணன் , நிர்வாகிகள் நாகராஜன், கெப்பையன், வீர ஜோதி, சபாபதி, வேல்முருகன் கலந்து கொண்டனர். வடக்கு ஒன்றிய தலைவர் அகில் நாயுடு நன்றி கூறினார்.