அருப்புக்கோட்டை, : ''பொருளாதார சுதந்திரமே பெண்ணிற்கான முழுமையான சுதந்திரத்தை பெற்று தரும் என முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் உலக மகளிர் தின விழா ஒரு வாரம் கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள், வரதட்சனை கொடுமை, பாலியல் வன்கொடுமை, பெண் உரிமைகள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் ரங்கோலி, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். துணை முதல்வர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் உமாராணி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கலந்து கொண்டு பேசுகையில், ''கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை. திருமணம் ஆன பின்பும் கூட பெண்கள் தொடர்ந்து உயர் கல்வி பயின்று அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை பெற்றுள்ளனர்.
வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களே தொடர்ந்து கல்வி பெற்று வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர். இன்றைய இளம் தலைமுறை மாணவிகள் சோர்வின்றி படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். பொருளாதார சுதந்திரமே பெண்ணிற்கான முழுமையான சுதந்திரத்தை பெற்று தரும் என, பேசினார்.
அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சுந்தர லட்சுமி, இன்றைய சமூக வன்முறைகளில் இருந்து பெண்கள்தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் ஷர்மிலி நன்றி கூறினார்.