திருவாடானை, : கண்மாய்களை துார்வாராமல் கரையை மட்டும் சீரமைப்பதால் பயனில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
திருவாடானை அருகே கடம்பூர் ஊராட்சி சிறுகாரை, குனங்குடி, சம்பாநெட்டி, பழங்குளம் ஊராட்சி ஊரணிக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்மாய் கரைகளை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. கண்மாய்களை துார்வாராமல் கரைகளை மட்டும் சீரமைப்பதால் பயனில்லை, என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கடம்பூர் விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் முயற்சியால் கண்மாய்களை துார்வார ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டது. இக்கண்மாய்களை துார்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.கண்மாய்களை துார்வாராமல் கரை மட்டும் சீரமைக்கப்படுகிறது.
இதனால் கண்மாய்களில் நீர் தேங்க வாய்ப்பு இல்லாததால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, கண்மாய்களை மராமத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், இந்த நிதி மூலம் கடந்தாண்டு கண்மாய்கள்மராமத்து செய்யப்பட்டது. தற்போது கரை சீரமைக்கும் பணி நடக்கிறது, என்றனர்.