ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே சரக்கரகோட்டை--கீழக்கரை ரோட்டில் போலீஸ் பட்டாலியன் குடியிருப்பு கட்டுமான பணி நடக்கிறது. இப்பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆர்.எஸ்.மடை கண்மாயில் ஆழ்குழாய் அமைத்து குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இப்பணியால் விவசாயம் பாதிக்கப்படும், என புகார் தெரிவித்து ஆர்.எஸ்.மடை கிராம மக்கள் பதித்த குழாய்களை நேற்று அகற்றினர்.
ராமநாதபுரம் தாசில்தார் சுரேஷ்குமார், ராமநாதபுரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாகரன் ஆழ்குழாய் அமைப்பதால் கண்மாய் நீர் குறைந்து விடும் என்று கூறினார். பொதுமக்கள் கூச்சலிட்டு போலீசாருடன்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதி பெற்று பணிகள் நடப்பதாக தாசில்தார் சமரசம் செய்தார்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாகரன் கூறுகையில், ஆர்.எஸ்.மங்கலம், சக்கரகோட்டை கண்மாய் பகுதியில் வெள்ளரி, பாகற்காய் பயிரிட்டு ஏழை விவசாயிகள் பிழைக்கின்றனர். அவ்விடத்தில் ஆழ்குழாய் அமைக்க கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக பேசியதற்காக என் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க போவதாக கூறியுள்ளனர். சட்டப்படி அதனை சந்திப்பேன், என்றார்.
Advertisement