திருச்சுழி, : திருச்சுழி அருகே ஊராட்சி துவக்கப்பள்ளி அருகில் இடியும் நிலையில் மேல்நிலை தொட்டி இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
திருச்சுழி அருகே பனையூர் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.
இந்த ஊருக்கு குடிநீர் ஆதாரமாக இருந்த மேல் நிலை தொட்டி தற்போது சேதம் அடைந்தும், ஆங்காங்கு கான்கிரீட் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இடியும் அபாயத்தில் உள்ளது.
இந்த தொட்டியை அகற்றி விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும் என ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த தொட்டி அருகே பள்ளி, நூலகம் இருப்பதால் விபத்து ஏற்படும் முன் இதை அகற்ற வேண்டும்.
பள்ளி மாணவர்கள் இந்தப் பகுதியை சுற்றி விளையாடி வருகின்றனர். பொதுமக்களும் இதன் வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது.
தொட்டியை உடனடியாக இடிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.-