காரியாபட்டி, : வாறுகால் சேதமடைந்திருப்பதால் கழிவு நீர் செல்ல வழி கிடையாது. ஆங்காங்கே குப்பை தேங்கி நிற்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பால் வீதிகள் சுருங்கி, ஆட்கள் கூட நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாறுகாலில் கான்கிரீட் உடைந்து, பள்ளமாக இருப்பதால், இரவு நேரங்களில் இடறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
மகளிர் சுகாதார வளாகம் இல்லாததால் பெண்கள் திறந்த வெளியை நாடுகின்றனர். தெரு விளக்குகள் ஆங்காங்கே எரியாததால், மல்லாங்கிணர் 9வது வார்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டில், கோவில்பட்டி ரோடு, கலைவாணர் தெரு, விக்ரமாதித்தன் தெரு, தியாகராஜ பாகவதர் தெரு, கருப்பசாமி கோவில் தெரு, அழகர்சாமி கோவில் தெரு, ஈ.வே.ரா., பெரியார் தெரு, நாகப்பசாமி கோவில் தெரு உள்ளன. அனைத்து வீதிகளிலும் வாறுகால்கள் சேதமடைந்துள்ளன.
குப்பை நிறைந்து காணப்படுவதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் ஏற்பட்டு கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கும் நிலை உள்ளது.
கோவில்பட்டி ரோட்டில் பதிக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்துள்ளதாலும், அதே ரோட்டின் நடுவில் உள்ள அடிகுழாய் இடையூறாக இருப்பதாலும் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. அனைத்து வீதிகளும் ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளன.
ஆட்கள் கூட நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரு சில வீதிகளில் மண் ரோடாக இருப்பதால், மழை நேரங்களில் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. வீதியின் குறுக்கே வாறுகாலின் மேல் போடப்பட்ட கான்கிரீட் உடைந்து பள்ளமாக இருப்பதால், இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள் இடறி விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஒரு சில இடங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் நடந்து செல்ல அச்சம் ஏற்படுகிறது. மகளிர் சுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளியை நாடுகின்றனர். மின்மோட்டாரை வைத்து உறிஞ்சுவதால் ஒரு சில பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
குடிநீரை உறிஞ்சும் கொடுமை
ஒரு சில இடங்களில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இருளில் நடமாட முடியவில்லை. சீரமைக்க வேண்டும். குடிநீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுகின்றனர். ஒரு சில மேடான பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. கூடுதலாக தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் ரோடாக உள்ள வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். ஏற்கனவே பதிக்கப்பட்டு, சேதம் அடைந்ததை சீரமைக்க வேண்டும்.
- வாசுதேவன்,
தனியார் ஊழியர்
சுகாதார வளாகம் தேவை
கோவில்பட்டி ரோட்டில் இடையூறாக இருக்கும் அடிகுழாயை அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளியை நாடுவதால் மகளிர் சுகாதார வளாகம் கட்ட வேண்டும். வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாறுகாலில் உள்ள கான்கிரீட் உடைப்பால், நடந்து செல்லும் போது இடறி விழுந்து விபத்து ஏற்படும் அச்சம் உள்ளதால் சீரமைக்க வேண்டும்.
-- சங்கரேஷ்வரி,
குடும்பத்தலைவி
பகலில் கொசுக்கடி
நடந்து செல்ல முடியாத அளவிற்கு வீதியில் உள்ள ரோடுகள் சேதம் அடைந்துள்ளதால், சீரமைக்க வேண்டும். கழிவுநீர் செல்ல வழியின்றி, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கும் நிலை உள்ளது. வாறுகாலை சீரமைக்க வேண்டும்.
- முத்துலட்சுமி
குடும்பத் தலைவி
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
வாறுகால், குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்ய மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நடைபெற உள்ளது.
-ராஜேஸ்வரி, கவுன்சிலர்
Advertisement