கொசு உற்பத்தி அதிகரிப்பு, தட்பவெப்ப நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது பரவிவரும் இன்ப்ளுயன்ஸா காய்ச்சலால் பல விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் கூறினர்.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், கண்வீக்கம், வலி ஒரு வாரத்திற்கு மேல் பாதிப்பு நீடிக்கிறது.இதிலிருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், பொது இடங்களுக்கு குழந்தைகளை கூட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் கூறினர். என நிபுணர்கள் கூறினர்.
இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சங்குமணி கூறியதாவது:காய்ச்சலில் டைப்பாய்டு, மலேரியா, எலி, ப்ளு உட்பட பலவகை உள்ளன. முதலில் எந்த மாதிரியான பாதிப்பு என கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.மாவட்டத்தில் தினமும் 80 பேர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளி நோயாளிகளாக வருகின்றனர். இதில் தொடர் பாதிப்பால் 10 பேர் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகள், படுக்கை, பரிசோதனை வசதிகள் அனைத்தும் உள்ளன. 5 நாட்களில் குணமடையலாம்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஐஸ்கிரீம், குளிர்பானங்களை உட்கொள்வதால் தொண்டையில் பாக்டீரியா, வைரஸ் தொற்று எளிதில் ஏற்படும். எனவே அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும், என்றார்.