வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை--''கடின உழைப்பும், விடா முயற்சியும் வாழ்க்கையை அர்த்தம் கொண்டதாக அமைத்து கொடுக்கும்'' என, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.
![]()
|
காவல்துறையினரின் வாரிசுதாரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில் நேற்று துவங்கியது.
இதில், சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள், தீயணைப்புத்துறை சிறைத்துறையில் பணிபுரியும், சீருடை பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின், துணைவியர் மற்றும் வாரிசுதாரர்கள் என, 1,000 பேர் கலந்து கொண்டனர்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்தது.
இம்முகாமை, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், துவக்கி வைத்து பேசியதாவது:
வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. என்ன மாதிரியான வேலையை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. பலர், ஆரம்பத்திலேயே 50 - 60 ஆயிரம் ரூபாய் ஊதியம் கிடைக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
நான், இன்ஜினியரிங் படித்து, விசாகப்பட்டினத்தில் 12 மணி நேரம், கட்டுமான தளத்தில் பணி புரிந்தேன்.
காவல் துறையில் சேர்ந்தபோது, பைக்கில் சென்று பணி செய்ய தான் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம், 'ஏசி' வசதி கிடைக்கவில்லை.
மார்க்கெட் நிலவரத்தை வைத்து தான், நிறுவனங்கள் ஊதியம் வழங்கும். பின், பணியில் காட்டும் ஆர்வம், உழைப்பை வைத்து, ஊதியத்தை உயர்த்தி வழங்குவர்.
களப்பணி சார்ந்த வேலை செய்தால், வாழ்க்கையில் ஏற்படும் விபரீதங்களை எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்.
சொந்த ஊரில் தான் வேலை வேண்டும் என, சிலர் கூறுகின்றனர். நான், உத்தரகாண்டில் பிறந்து, டில்லியில் படித்து, தமிழகத்தில் வேலை செய்கிறேன்.
இடம் பெயர்ந்து வேலை செய்வதில் குடும்பம் சார்ந்த சிரமம் இருக்கும் தான். அதையெல்லாம் கடந்து, வாழ்க்கையில் முன்னேற, பிற பகுதி கலாச்சாரத்தை உணர, பலவித அனுபவங்கள் கிடைக்க, இடம் பெயர்ந்து வேலை செய்வது அவசியம். கடின உழைப்பும், விடாமுயற்சியும் வாழ்க்கையை அர்த்தம் கொண்டதாக அமைத்து கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()
|
இந்நிகழ்ச்சியில், சென்னை கூடுதல் காவல் ஆணையர் லோகநாதன், இணை ஆணையர் சாமூண்டீஸ்வரி, துணை ஆணையர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன், ராமமூர்த்தி, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு உறுப்பினர் ராம்கிஷோர், இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பு முகாம், இன்றும் நடைபெற உள்ளது.
வேலை தேடிய கணவர்கள்
வேலைவாய்ப்பு முகாமில், 600 பெண்கள், 400 ஆண்கள் கலந்து கொண்டனர். இதில், 35க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண் காவலர்களின் கணவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், 35 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருந்தனர்.
Advertisement