விருதுநகர், ; உணவு பழக்க மாற்றம், வீட்டிற்கு வரும் உணவால் சந்தை மதிப்பு அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்று லாபம் பெற வேண்டும், என விருதுநகரில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
விருதுநகரில் வேளாண் விற்பனை, வணிகத்துறை மூலம் நீர்ப்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்களுக்கான தொழில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் கருத்து பரிமாற்றக் கூட்டம் நடந்தது.
இதை துவங்கி வைத்து கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது:
நீர்ப்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 2017--18 முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.2.76 கோடியில் கவுசிகா உப வடி நீர் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வீட்டில் சமைப்பதை விட, தயாரிப்பவர்களிடம் இருந்து வீட்டிற்கே பெற்று உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கிறது.
வாழ்க்கை மாற்றத்தால் ஏற்படக்கூடிய நோய்களை ஒட்டிய உணவுப்பழக்க வழக்கங்களால் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக சிறுதானிய உணவுகள், காய்கறிகள் உள்ளிட்டவை அதிகமாக பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
இதிலும் சந்தை வாய்ப்பு உள்ளன.மாறி வரும் சூழலை பயன்படுத்தி விவசாயிகள் விளை பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து அதிக லாபம் பெற வேண்டும், என்றார்.
வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன், வேளாண் துணை இயக்குநர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.