நிலக்கோட்டை, : திண்டுக்கல் மாவட்டத்தில் சில மாதங்களாக கிராமங்கள்,நகரங்களில் அலைபேசி அழைப்புகள் சரிவர கிடைக்காமலும் இடையிடையே தடை ஏற்பட்டும் ,பல நேரங்களில் நெட்வொர்க் வசதி கிடைக்காமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தகவல் தொடர்பில் பல நிறுவனங்கள் செயல்படும் நிலையில் சமீப நாட்களாக அலைபேசி அழைப்புகள் சரிவர கிடைக்காமலும், நெட்வொர்க் வசதி கிடைக்காமல் உள்ளன. அப்படியே கிடைத்தாலும் இடையிடையே நின்று விடுகின்றன. ஒருவரை அழைக்கும் போது அவர் அழைப்பை ஏற்று கொண்டாலும் பேசும் குரல் கேட்பதில்லை.
பல நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும் போது மற்றொரு அழைப்பு இணைகிறது. இதுபோன்று பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் அலைபேசி சந்தாதாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நகர் பகுதியிலே இவ்ளவு இடையூறுகள் ஏற்பட்டால் கிராமங்களில் சொல்லவே தேவையில்லை. நெட்வொர்க் கிடைப்பதே அரிதாக உள்ளது. டிஜிட்டல் இந்தியா என மார்தட்டிக் கொள்ளும் நாம் கிராமங்களில் ஆண்ட்ராய்டு அலைபேசிகள் பயன்படுத்துவது இன்னும் குதிரை கொம்பாகத்தான் உள்ளது.
.........
வேதனையாக உள்ளது
அரசு அலுவலர்கள் கிராமப்புறங்களுக்கு சென்றால் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொள்வது கடினமாக உள்ளது. கிராமங்களில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பல ஊராட்சிகளில் நெட்வொர்க் கிடைக்கவில்லை. ஊராட்சி செயலாளர்கள் நகர்ப்புறங்களில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு சென்று தங்களது பதிவேடுகளை பதிவேற்றம் செய்கின்றனர். அரசு கேட்கும் அறிக்கைகளை ஊராட்சி அலுவலகங்களில் இருந்து வி.ஏ.ஓ., அலுவலகங்களில் இருந்து அனுப்புவது சிரமமாக உள்ளது. கிராமங்களிலும் அலைபேசி நெட்வொர்க் வசதிகள் நகரத்தை போலவே கிடைக்க வேண்டும். 5 ஜி அலைக்கற்றைகள் அறிமுகமாக உள்ள இந்த நாட்களில் அலைபேசியே பயன்படுத்த முடியாத கிராமங்கள் இருப்பது வேதனையாக உள்ளது.
சரவணன், அ.தி.மு.க., நகர துணை செயலாளர், நிலக்கோட்டை: