திண்டுக்கல், : மழை நேரங்களில் குளம் போல் தெருக்களில் ஓடும் கழிவுநீர்,சேதமான பேவர் பிளாக் ரோடுகள்,வீதிகளில் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு,இரவில் நடமாட முடியாத அளவிற்கு கொசுக்கள் என, திண்டுக்கல் மாநகராட்சி 11வது வார்டு மக்கள் ஏராளமான பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
கொத்தனார் சந்து,குருசாமி பிள்ளை சந்து,லைன் ரோடு, சினிமாரோடு,கச்சேரி தெரு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில், மழை நேரங்களில் இடுப்பளவிற்கு தண்ணீர் செல்வதால் பொது மக்கள் நீச்சல் அடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
கச்சேரி தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெருவில் பலரும் திறந்தவெளியில் சிறுநீர் கழித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். பெண்கள் பள்ளியின் சுற்றுச்சுவர் அதன் அருகிலிருப்பதால் மாணவிகள் திக்குமுக்காடுகின்றனர். அதிகாரிகள் எப்போதாவது இங்கு வந்து பார்வையிடும் நிலையில் அவ்வப்போது தேவைப்படும் பணிகளை மட்டும் கண்துடைப்பிற்கு செய்கின்றனர்.
கச்சேரி தெருவில் பள்ளி அருகே சிறுநீர் கழிப்பதை தடுக்க நடமாடும் கழிப்பறைகளை அதிகாரிகள் ஏற்படுத்தினர். அதையும் சிலர் மதுபோதையில் சேதப்படுத்திவிட்டனர். பாதாள சாக்கடைகள் பல இடங்களில் திறந்து கிடக்கிறது.
எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் அதிக்கத்தை செலுத்துகின்றனர். இரவில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு கொசுக்கள் மக்களை கடித்து குதறுவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
தெரு விளக்குகள் தேவை உள்ளதாக மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தால் அதுகுறித்து காதில் வாங்கவே மறுக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் கச்சேரி தெருவில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் ரோடுகள் சேதமாகி பொதுமக்கள் நடக்கவே தடுமாறுகின்றனர். வாகன ஓட்டிகள் மழை நேரங்களில் வழுக்கி கீழே விழுகின்றனர்.
இங்கு நடக்கும் பிரச்னைகள் குறித்து தெரிந்தும் அதிகாரிகள் மவுனமாக உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குடியிருக்கும் மக்கள் குப்பையை கச்சேரி தெருவில் கொட்டுகின்றனர்.
அதை மாநகராட்சி ஊழியர்கள் சிறிது சிறிதாக அள்ளி செல்லும் நிலையும் தொடர்கதையாகிறது. மழை நேரங்களில் ரோட்டில் மழை நீர் செல்லாமல் இருக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.