பரமக்குடி, : பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மனுக்கு 3 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 'சக்தி' கோஷம் முழங்க பக்தர்கள் வழிபட்டனர்.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நகரில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள், வியாபாரிகள் பூத்தட்டுகளை வைத்து வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணி முதல் ஒவ்வொரு இடத்தில் இருந்தும் 50 க்கும் மேற்பட்ட பூத்தட்டுகள் புறப்படாகின. அனைத்து பூத்தட்டுக்களும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோயிலை அடைந்தது.
பின், நள்ளிரவு 1:00 மணி முதல் விடிய, விடிய பக்தர்கள் செலுத்திய 3 டன்பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மலர் கிரீடம் சூட்டி மூலஸ்தானம் துவங்கி, படிக்கட்டுகள் வரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.
மேலும் கோயிலில் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று காலை 11:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. அனைத்து பூக்களும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
மார்ச் 28 காலை முத்தாலம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் பங்குனி விழா துவங்குகிறது.