வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
சென்னை-'ஆவின்' பால் பாக்கெட் எடை குறைக்கப்பட்டுள்ளது, நுகர்வோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![]()
|
ஆவின் நிறுவனம் சார்பில், சென்னையில் தினமும், 14 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. மாதவரம், சோழிங்கநல்லுார், அம்பத்துார் பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் ஊருக்கு சென்றிருப்பதால், உள்ளூர் தொழிலாளர்களை வைத்து பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய மோசடி
பால் உற்பத்தியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆவினுக்கு பால் வழங்க மறுத்து, இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சென்னைக்கு ஆவின் பால் வரத்து குறைந்து வருகிறது.
இதை பயன்படுத்தி, ஆவின் பால் பண்ணைகளில் உள்ள அதிகாரிகள், புதிய மோசடியில் ஈடுபட துவங்கி உள்ளனர்.
![]()
|
பால் பாக்கெட் எடையை குறைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். வழக்கமாக, 500 மி.லி., பால் பாக்கெட், 522 கிராம் இருக்கும்.
அதிர்ச்சி
கடந்த இரண்டு நாட்களாக விற்பனைக்கு வரும் ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிற பால் பாக்கெட், 482, 485, 487, 512 கிராம் என்ற அளவிலேயே எடை உள்ளது. இது, நுகர்வோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இவ்வாறு சிறுக, சிறுக திருடப்படும் பால், மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும், அதில் கிடைக்கும் வருவாய் மேலிடம் வரை பங்கிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. பால் உரிய அளவில் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்.
Advertisement