மண்ணையும், மண் சார்ந்த கலாசாரத்தையும் கட்டிக்காக்கும் பொக்கிஷம் நாட்டுப்புற கலைகள். வரிசை கட்டிவரும் தொழில் நுட்பங்கள் வரவால் அந்த கலைகள் தொலைந்து போய்க்கொண்டிருந்தாலும் கிராமங்களில் மண் மனம் பேசும் கரகாட்டம் உள்ளிட்ட கலைகளுக்கு மக்களிடம் இன்றும் மவுசும், ரசனையும் கொஞ்சமும் குறையவில்லை.
இதற்கு காரணம், மதுரை பேராசிரியர் மலைச்சாமி போன்ற கலைஞர்கள் தான். பேராசிரியர் பணியுடன் 18 ஆண்டுகளாக கரகாட்டக் கலை பயணத்தையும் மேற்கொண்டு வருவது குறித்து அவர்…
தற்போதைய பணி பொறியியல் கல்லுாரியில் என்றாலும் பள்ளியில் படிக்கும் போதே நாட்டுப்புற கலைகள் மீதான தாகம் எனக்குள் இன்னும் குறையவில்லை.
'கரகாட்டக்காரன்' படத்தில் நடிகர் ராமராஜனுக்கு 'டூப்' போட்டு நடித்த கலைஞர் லுார்துசாமி பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் என் கரகாட்டம் ஆர்வத்தை கூறினேன்.
அவரிடம் தான் முதலில் 'ஆட்டக்கரகம்' கற்றேன். பின் தஞ்சையில் தேன்மொழி ராஜேந்திரன், மதுரையில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழு என மிகப் பெரிய கலைஞர்களின் தொடர்புகள் கிடைத்து கரகாட்டக் கலையை மெருகேற்றிக்கொண்டேன்.
திருமண வாழ்க்கை துவக்கத்தில் என் கலைப் பயணத்திற்கு சற்று தடங்கல் ஏற்பட்டது. ஆனால் என் 'கலைக் காதலை' மனைவியிடம் புரிய வைத்தேன். எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். இதனால் கல்லுாரி நாட்களை கற்பித்தல் பணிக்கும், விடுமுறை நாட்களை கலைப் பணிக்கும் கொடுத்து விடுவேன். கரகாட்டம் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கருப்பசாமி ஆட்டம் என திறமைகளை வளர்த்துக்கொண்டேன்.
பல மாவட்டங்களிலும் வெளி நாடுகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரகாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். பார்வையாளர்களை கவர கரகம் ஆடிக்கொண்டே கண் இமையால் ஊசி எடுப்பது, எலுமிச்சையை குத்தி எடுப்பது, சோடா பாட்டிலை துாக்குவது, வட்டத் தட்டில் நிற்பது போன்ற பல சாகசங்களை செய்ய வேண்டியுள்ளது. கரகாட்டம் என்றாலே பெண்களுக்காக கூட்டம் வந்தது என்ற மாயை மாறி, தற்போது கலையை அங்கீகரிக்கும் இளைஞர்கள் கூட்டம் நகரிலும் உருவாகிக்கொண்டுள்ளது.
என் கலைப் பயணத்தை அங்கீகரித்து மதுரை கலைப் பண்பாட்டுத்துறை எனக்கு 'கலைச்சுடர்மணி' விருது வழங்கியது. கரகாட்டக்கலைஞர்கள் வாழ்க்கை முறையை வைத்து 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். அவற்றை தொகுத்து 'டோப்புக்கிளியும் காகித சிறகுகளும்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டுள்ளேன் என்றார் இந்த பேராசிரியர் கலைஞர்.
இவரை 98654 27756 ல் பாராட்டலாம்.
Advertisement