மதுரை : கொப்பரையை பதப்படுத்தி கூடுதல் நாட்களுக்கு பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பத்தை வேளாண் பல்கலை உருவாக்கி தரவேண்டும் என உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் தங்களது தேங்காய்களை ஓடு எடுத்த பின் முற்றிய கொப்பரையாக விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். அரசு கொள்முதல் விலையாக கிலோ ரூ.105 வரை கொப்பரைக்கு நிர்ணயித்திருந்தாலும் அந்த விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்கின்றனர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள்.
அவர்கள் கூறியதாவது:
விவசாயிகளிடம் இருந்து கொப்பரைகளை வாங்கி மொத்தமாக விற்கிறோம். வேளாண் வணிகத்துறை மூலம் விற்றால் அதிகபட்சம் கிலோவுக்கு ரூ.80 தான் விலைபோகிறது. கேட்டால் கொப்பரை தரமில்லை ஈரப்பதம் அதிகம் பூஞ்சாணம் என்று சொல்லி வியாபாரிகள் விலையை குறைத்து விடுகின்றனர். நிறுவனங்களில் உள்ள சோலார் டிரையர் மூலம் அதிகபட்சமாக 10 நாட்கள் வரை பாதுகாக்க முடியும்.
பத்து நாட்களுக்குள் கொப்பரைக்கு சரியான விலை கிடைத்தால் விற்று விடலாம். விலை கிடைக்காத போது கூடுதல் நாட்களுக்கு பாதுகாக்க முடியாததால் வீணாகி நஷ்டம் ஏற்படுகிறது.
கந்தக புகை மூலம் பதப்படுத்தினால் நஞ்சு உள்ளதென தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (நாபெட்) அமைப்பினர் வாங்க மறுக்கின்றனர்.
அசிடிக் அமில திரவத்தில் காய்களை புரட்டி எடுக்கும் போது வெளியேறும் நெடியால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். பதப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கோவை வேளாண் பல்கலை உருவாக்கித் தரவேண்டும் என்றனர்.
இதுகுறித்து கோவை வேளாண் பல்கலை ஆராய்ச்சி இயக்குநர் ரவீந்திரன் கேட்டபோது கூறியதாவது:
பல்கலை மூலம் இந்தாண்டு 2வித அமிலநிலைகளில் கொப்பரைகளை பாதுகாப்பது குறித்த ஆராய்ச்சி முடிந்து செயல்வடிவில் உள்ளது.
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மில்லி கிளேசியல் அசிட்டிக் அமிலம் கலந்து கொப்பரை காய்களை நனைத்து எடுத்தால் 4 முதல் 5 வாரங்கள் வரை பாதுகாக்கலாம். இதேபோல ஆர்கானிக் முறையில் 'ப்ரோப்யூனிக்' அமிலத்தையும் இதே முறையில் பதப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.
அடுத்ததாக வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் கொப்பரைகளை கையாளும் நிறுவனங்களுக்கு ஆராய்ச்சியை கொண்டு செல்ல உள்ளோம் என்றார்.