மதுரை, : பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்க சட்டப் பணிகள் ஆணைக்குழு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், நிறுவனத்தில் வேலை செய்தார். வேலையை ராஜினாமா செய்தார். அவருக்கு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து, ஏமாற்றி உடலுறவு கொண்டார். பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது.
பெண்,'பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார்.
அரசு தரப்பு: சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. விசாரணை முடிந்த பின்தான் இழப்பீடு வழங்க இயலும்.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் மனுவை விதிகளுக்குட்பட்டு 6 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.