வரும் 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக, நவம்பர் அல்லது டிசம்பரில், பா.ஜ., தலைமை ஆலோசனை செய்ய உள்ளது.
வரும் 2024 ஏப்ரல் - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதில், 'ஹாட்ரிக்' வெற்றி பெற, மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிர முனைப்புடன் பணியாற்றி வருகிறது.
பல்வேறு வியூகங்களை அக்கட்சி வகுத்துள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில், கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக முடிவு செய்ய, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் ஆறு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தக் குழு, மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்து, வரும் நவம்பர் அல்லது டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசிக்க உள்ளது. இதன் முடிவில் கூட்டணி உறுதி செய்யப்படும்.
இந்தக் கூட்டத்தில், பழனிசாமி - பன்னீர்செல்வம் என அ.தி.மு.க.,வும், ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரே என சிவசேனாவும் பிளவுபட்டு கிடப்பதால், இந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடில்லி நிருபர் -