வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'ஆருத்ரா, ஹிஜாவு' உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி தாக்கல் செய்த மனு:
ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ்., என, பல நிதி நிறுவனங்கள், 'மாதம் 5 முதல் 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர். லட்சக்கணக்கான மக்களிடம் பல ஆயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
இதுபோன்ற நிதி நிறுவனங்களை நடத்த, அரசு எவ்வித விதிகளையும் வகுக்கவில்லை. தனியார் வங்கிகளும், இந்நிறுவனங்களுக்கு உடந்தையாக இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் கருப்பு பணத்தை முதலீடு செய்கின்றனர்.
![]()
|
ஒரு சில மாதங்களுக்கு வட்டி கொடுத்து விட்டு, பின் நஷ்டக் கணக்கை காட்டி, நிறுவனங்களை மூடி விட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடுகின்றனர். முதலீடு செய்த மக்கள் பாதிக்கப்பட்டு, பணத்தை திரும்பப் பெற முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.
இதுபோன்ற மோசடி வழக்குகளை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். அந்த விசாரணையை, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிக்க வேண்டும்.
மக்களை ஏமாற்றிய முதலீட்டு நிறுவனங்கள் மீது, காவல் துறை நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ''மனுதாரருக்கு, இந்த வழக்கு தொடர தகுதியில்லை. அனைத்து நிதி நிறுவன மோசடிகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
''விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை,'' என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், முதலீட்டு நிறுவனங்கள் மீதான புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து, காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வழக்கு குறித்து விரிவான மனுவை, மனுதாரர் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை 24க்கு தள்ளி வைத்தனர்.