வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
கோவை: ''தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாதது குறித்து கல்வி அமைச்சர் அளித்த விளக்கம் ஏற்கும்படி இல்லை' என, 'புதிய தமிழகம்' கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை.பிளஸ் 2 பொதுத்தேர்வில், தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.கொரோனா 'ஆல்பாஸ்' வாயிலாக தேர்ச்சி பெற்று வந்தவர்களில் பலர், 2022ம் ஆண்டு நடந்த, 11ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெறவில்லை. அவர்கள் மேற்கொண்டு படிப்பையும் தொடரவில்லை.

அந்த மாணவர்கள் பெயரும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஓராண்டுக்கு முன்பாகவே பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்கள் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் பட்டியலில் இடம்பெற்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது.அனைத்து மாணவர்களும் பிளஸ் 2 வரை படிக்க வேண்டும் என, இந்த அரசு கருதி இருந்தால் துவக்கத்தில் இருந்தே, ஒவ்வொரு மாணவர் மீதும் அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து இப்போது பெற்றோர் மீது குற்றம் சுமத்துவது நியாயமாகாது.
பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து கல்வி அமைச்சர் அளித்த விளக்கம் ஏற்கும்படி இல்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மாணவர்களுடைய வருகை பதிவேட்டை சரி பார்த்து, அவர்களது சமூக, பொருளாதார நிலைகளை ஆராய்ந்து, பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement