திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிய, பா.ஜ., பிரமுகரின் வீடு, நீதிமன்ற உத்தரவில் இடித்து அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு பக்கத்தில், அம்மனி அம்மன் கோபுரம் உள்ளது. இதன் எதிரே, 23 ஆயிரத்து, 800 சதுரடி பரப்பளவில் அம்மனி அம்மன் மடம் உள்ளது. அதை, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு தானமாக, அதன் அறக்கட்டளை நிர்வாகிகள், 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கி விட்டனர்.
அந்த இடத்தில், 3,800 சதுர அடி காலி மனையை, பா.ஜ., ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் ஆக்கிரமித்து, வீடு மற்றும் கார் ஷெட் கட்டியிருந்தார்.
இடத்தை காலி செய்ய, கோவில் நிர்வாகம் கூறி வந்த நிலையில், பா.ஜ., பிரமுகர் சங்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விசாரித்த நீதிமன்றம், கோவில் இட ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு நேற்று வருவாய்த்துறையினர் முன்னிலையில் இடிக்கப்பட்டது.