கோவை : இலங்கை தாதா அங்கொட லொக்கா மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஒரு வார காலத்திற்குள் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
இலங்கையை சேர்ந்தவர் அங்கொட லொக்கா (எ) மத்துமகே சந்தன லசந்த பெரேரா. இவர் பிரபல தாதா. இவரை இலங்கை கொழும்புவில் எட்டுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் போலீசார் தேடி வந்தனர்கடந்த, 2017ம் ஆண்டு சட்டவிரோதமாக தமிழகத்துக்கு வந்த இவர், 2020-ம் ஆண்டு பிப்., முதல் கோவை சேரன் மாநகர் பாலாஜி நகரில் பிரதீப் சிங் என்ற பெயரில், வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இவருடன் அம்மானி தான்ஜி மொக்காரியா, 27, என்ற பெண்ணும் வசித்து வந்தார்.கடந்த, 2020 ஜூலை, 3ம் தேதி அங்கொட லொக்காவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, பிரேதப் பரிசோதனைக்குப் பின், சடலம் மதுரையில் தகனம் செய்யப்பட்டது.பின் இறந்தது அங்கொட லொக்கா என போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அம்மானி தான்ஜி, மதுரையைச் சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.சி.பி.சி.ஐ.டி., போலீசார் இறந்தது அங்கொட லொக்கா தானா என விசாரித்தனர். அவரது தாயாரிடமிருந்து டி.என்.ஏ., மாதிரிகள் பெறப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.இதில் இறந்தது அங்கொட லொக்கா என உறுதி செய்யப்பட்டது.
உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணம் எனத் தெரிந்தது. இதையடுத்து, ஒரு வாரத்தில் வழக்கை முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது.