திருநெல்வேலி : பாளை.,யில் நடந்த நிகழ்ச்சியில் தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கி, பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் சட்டசபை கூட்ட தொடரில் நாளை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் சமூக நலத் துறை மற்றும் மகளிர் உரிமை நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.,க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தனர்.
விழாவுக்கு தலைமை வகித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
தமிழகத்தில், முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம் போன்ற திட்டங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்.
தமிழகத்தில், பெண் முன்னேற்றதை கருத்தில் கொண்டு பெண் காவலர்கள், பெண் ஆசிரியைகள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் 3ல் 1 பங்கு பெண்களுக்கு இடங்கள் ஆகியவற்றை வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
தற்போது முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்காக, டவுன் பஸ்களில் இலவச பயண திட்டம், புதுமைப் பெண் திட்டம் என செயல்படுத்தி வருகிறார்.
பெண்கள், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி போன்ற உயர்ந்த பதவிகளில் பணியாற்ற வேண்டும் மற்றும் பெண்கள் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும்.
வரும் சட்டசபை கூட்டத் தொடரில், குடும்ப தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு 1,000 என்பது ஓசியும் இல்லை. இலவசமும் இல்லை. அது பெண்களுக்கான உரிமைத்தொகை.
இவ்வாறு அவர் பேசினர்.