திருச்சி : திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவான அசாம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பழமுதிர் நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குவாதர் அலி, 22, பணிபுரிந்தார். அதே கடையில் பணிபுரிந்த, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே, நொச்சியம் பகுதியைச் சேர்ந்த, 22 வயது பெண்ணை, திருமணம் செய்வதாக கூறி, உல்லாசமாக இருந்துள்ளார்.
இதில், கர்ப்பமான அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, குவாதார் அலியை வற்புறுத்தியுள்ளார். அந்த வாலிபர், ஓராண்டுக்கு முன் பெண்ணிடம் சொல்லாமல், அசாம் மாநிலத்துக்கு தப்பி சென்றார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார்படி, மண்ணச்சநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனிப்படை போலீசார் ஓராண்டுக்கு பின், அசாம் மாநிலத்தில், சொந்த ஊரில் இருந்த குவாதர் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.