வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இடையே 'கோர் பாங்கிங்' இணைப்பு இல்லாததால் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவது ஓரிடத்திலும் திருப்பி செலுத்துவது ஓரிடத்திலுமாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 32 மத்திய கூட்டுறவு வங்கிகள் 130க்கும் மேற்பட்ட நகர கூட்டுறவு வங்கிகள் 4500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன.
தற்போது வரை 32 மத்திய கூட்டுறவு வங்கிகள் மட்டுமே 'கோர் பாங்கிங்' இணைப்பில் உள்ளன. இந்த வங்கிகளுக்குள் ஆன்லைன் முறையில் பணபரிவர்த்தனை முதல் அத்தனை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நகர கூட்டுறவு வங்கி கூட்டுறவு கடன் சங்கங்களில் 'கோர் பாங்கிங்' இணைப்பு இல்லை.
குறிப்பாக கடன் சங்கங்களில் பத்தாண்டுகளுக்கு முன்பே கம்ப்யூட்டர் மயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கம்ப்யூட்டர்களை இணைக்கும் போதே 'கோர் பாங்கிங்' செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் விவசாயிகள் ஒவ்வொருவரும் 2 இடங்களில் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர்.
![]()
|
உறுப்பினர் என்ற அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள கடன் சங்கத்தில் கணக்கு வைத்திருப்பர். பயிர்க்கடன் வாங்க வேண்டும் என்றால் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் தனியாக கணக்கு துவங்க வேண்டும்.
இதை 'மிர்ரர் அக்கவுண்ட்' என்கின்றனர். ஒவ்வொரு விவசாயியிடம் கடன் அட்டை இருந்தாலும் நேரடியாக கடன் சங்கத்தில் சென்று பயிர்க்கடன் பெற முடியாது. வங்கிக்கு சென்று அங்கு தான் பணத்தை எடுக்க முடியும்.
அலைக்கழிப்பு
அதன் பின் கடன் சங்கத்தில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறை பயிர்க்கடன் பெறுவதற்கு இரண்டு நடைமுறைகளை பின்பற்றுவதால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இந்த குழப்பத்தால் கடன் சங்கங்களில் முறைகேடு நடப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்கினால் கூட உலகளாவிய நெட்வொர்க்கிங்கில் உடனடியாக ஈடுபடுகின்றனர்.
லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக திகழும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இன்னமும் தொழில்நுட்ப வசதியின்றி ஆரம்பநிலையிலேயே செயல்படுகின்றன. 'கோர் பாங்கிங்' இணைப்பில் கடன் சங்கங்களை சேர்க்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.