புதுக்கோட்டை : 'கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்,' என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரித்துள்ளது.
புதுக்கோட்டையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கோரிக்கை வலியுறுத்தி, நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜன் கூறியதாவது:
தமிழக அரசு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி, பழைய முறைப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தபடி, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்குவதாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்.
தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கையை திட்டத்தை ஆதரிக்கிறதா; எதிர்க்கிறதா என்பதை விளக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 30 மாத அகவிலைப்படியை விடுவிக்க வேண்டும். கோரிக்கை நிறைவேறாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.