பெருந்துறை : ஈரோடு மாவட்டத்தில், தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் உட்பட, திட்டம் வகுத்து கொடுத்த போலீசையும் பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில், 2021ல், இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில், திசையன்விளையைச் சேர்ந்த செந்தில்குமார், 30, என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பெருந்துறையில் மளிகை கடை ஒன்றில் சந்தேகப்படும்படி சிலர் நடமாட்டம் இருப்பதாக, பெருந்துறை இன்ஸ்பெக்டர் மதுசூதா பேகத்திற்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், அந்த மளிகை கடை, ஈரோடு ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீஸ் ராஜிவ்காந்திக்கு சொந்தமானது என தெரிய வந்தது.
பின் அவர் குறித்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
திருட்டு வழக்கில் கைதான செந்தில்குமாரை, கோவை சிறையில் இருந்து, பெருந்துறை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வருவர். அந்த குழுவில் பெருந்துறை குற்றப்பிரிவு முதல் நிலை போலீசாக பணிபுரிந்து வந்த ராஜிவ்காந்தியும் இடம் பெற்றிருந்தார்.
அப்போது அவருக்கும், செந்தில்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, 'போலீசிடம் சிக்காமல் திருடுவது எப்படி என, நான் கற்று தருகிறேன்.
தண்டனை முடிந்ததும், என்னை வந்து பார்' என ராஜிவ்காந்தி கூறியுள்ளார்.
கடந்தாண்டு தண்டனை முடிந்து, செந்தில்குமார் வெளியே வந்தார். அப்போது ராஜிவ்காந்தி, ஈரோடு ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். இருவரும் சந்தித்தனர்.
பல இடங்களில் திருடுவதற்காக ராஜிவ்காந்தியின் மளிகை கடையில் தங்கி, செந்தில்குமார், அவருக்கு உதவியாக மதுரையை சேர்ந்த கருப்பசாமி, பாலசுப்பிரமணியம் என இருவரை சேர்த்து கொண்டார்.
இதன்படி பல வீடுகளில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
இதற்கிடையில் பெருந்துறையில் நடந்த கொள்ளை வழக்கு தொடர்பாக மதுரை, மேலுாரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, 42, கருப்புசாமி, 31, திருட்டுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ் ராஜிவ்காந்தி ஆகியோரை, பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சித்தோட்டில் நடத்த திருட்டு வழக்கில் செந்தில்குமாரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 6 சவரன் நகை, இரண்டு பட்டா கத்தி, ஒரு கார், ஒரு 'பைக்' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.கைதான அனைவரும், பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபி சிறையில் அடைக்கப்பட்டனர்.